டாமினிக்கா: வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தொடரில் இந்திய அணிக்கு அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே முக்கிய வீரராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. அண்மையில் முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிறந்த ஃபார்மில் ரஹானே இருந்தார். அதேபோல் ரஹானேவின் கிரிக்கெட் கரியரில் உள்ளூரை விடவும் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, 635 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ரஹானேவின் பேட்டிங் சராசரி 102.8ஆக உள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடரிலும் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே அஜிங்கியா ரஹானே துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அஜிங்கியா ரஹானே சிறப்பாக செயல்படவில்லை என்றால், இந்த டெஸ்ட் தொடரே அவருக்கு கடைசி டெஸ்ட் தொடராக அமையவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் 18 மாதங்களாக இந்திய அணியில் இல்லாத ரஹானேவின் இடத்தில் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் விலகிய காரணத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு ரஹானே தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே 18 மாதங்களுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த வீரருக்கு எப்படி துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டது என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஜிங்கியா ரஹானே சிறப்பாக செயல்படவில்லை என்றால், நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அவரின் இடம் கொடுக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணி அடுத்ததாக ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை என்று தயாராக உள்ளது. இதனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட குறைந்தது 6 மாதங்களாகும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன. இதனால் துணைக் கேப்டன் ரஹானே தலைக்கு மேல் கத்தி தொங்குவதாக கருத்துகள் நிலவுகிறது.