சென்னை: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திடீரென ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வினை அணிக்குள் கொண்டு வந்ததற்கான பின்னணி காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு ரோகித் சர்மா தரப்பில் குல்தீப் யாதவை ஒழித்து வைக்க வேண்டும் என்பதோடு, அஸ்வினின் அனுபவமும் அவசியமான ஒன்று என்று கூறி இருந்தார். அதேபோல் ஸ்பின் ஆல்ரவுண்டர்களில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உலகக்கோப்பைக்கான திட்டங்களில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்திய அணியை பொறுத்தவரை 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 ஸ்பின்னர்களுடன் தான் உலகக்கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது. அதில் பும்ரா மற்றும் சிராஜ் முதன்மை வேகப்பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர். அதேபோல் ஹர்திக் பாண்டியா 3வது வேகப்பந்துவீச்சாளராக செயல்பட உள்ளார். அதேபோல் ஸ்பின்னர்களில் குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருக்கிறார்கள்.
இதில் முதன்மை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் மட்டுமே இருக்கிறார். ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் நல்ல விக்கெட் டேக்கர்கள் கிடையாது. இதனால் விக்கெட் டேக்கர்களாக பும்ரா, சிராஜ் மற்றும் குல்தீப் ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு விக்கெட் வேண்டுமென்றால் இன்னொரு முனையில் இருந்து பிரஷர் கொடுக்க வேண்டும்.
அதேபோல் ஒரேயொரு ஸ்பின்னரை நம்பி 11 போட்டிகளில் களமிறங்க முடியாது. உலகக்கோப்பை இடையில் காயம் காரணமாக வெளியேறினாலும் இந்திய அணி பெரும் சிக்கலில் சிக்கும். இதனால் பேக் அப் ஸ்பின்னராக அஸ்வினை தயார் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
கடந்த முறை ஆஸ்திரேலிய பயணத்தின் போது குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக களமிறக்கப்படவே இல்லை. அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டாய்னிஸ் உள்ளிட்டோர் அஸ்வினுக்கு சுழலில் சிக்குவார்கள். அதேபோல் சேப்பாக்கம், டெல்லி, ராஜ்கோட், பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட மைதானங்கள் குறித்து அஸ்வினின் தெளிவு வேறு எந்த ஸ்பின்னருக்கும் இல்லை.
அதேபோல் சேப்பாக்கம், லக்னோ, குஜராத் ஆகிய மைதானங்களில் ஆஃப் ஸ்பின்னர் இல்லாமல் குல்தீப் யாதவை மட்டுமே நம்பி களமிறங்கினால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குல்தீப் யாதவின் நம்பிக்கையை ஒரு போட்டியில் சிதறடித்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்ப தொடங்கிவிடுவார். இதனால் அஸ்வினின் உடல்தகுதி மற்றும் பேட்டிங் ஆகியவற்றை கொண்டு அவரை பேக் அப் வீரராக தேர்வு செய்வதற்காக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு தேர்வு ப்செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.