-கவிஞர் மகுடேஸ்வரன்
இந்த விளையாட்டு மட்டும்
ஏன் பிடித்தது ?
இதற்கு
அப்படியென்ன ஆற்றல் ?
ஏன் நம்மை
ஆட்டிப்படைக்கிறது இது ?
இளமையில் நாம்
இதையே விளையாடினோம்.
விளையாட்டுக்கு ஆள்கூப்பிட
இதன் நிமித்தமே
நண்பன் வீட்டுக்குச் சென்றோம்.
இதற்கு முன்
உண்டிராத இனிப்பையும் தேநீரையும்
சுவைத்தோம்.
நண்பனின் தாயார்க்கு
நம்மையும் மகனாக்கியது இவ்விளையாட்டு.
இதற்குத்தான்
ஆள்கணக்கு தேவையில்லை
இருவராகவும் விளையாடினோம்
பதின்மராகவும் விளையாடினோம்.
இதற்குத்தான் களம்
வேண்டியதில்லை
முள்காட்டில்
முச்சந்தியில்
மொட்டைமாடியில்
வீதியில் வெளியில்
வயல்வரப்பில் என
எங்கும் விளையாடினோம்.
இதற்குத்தான் கால வரம்பில்லை.
ஐந்து வீச்சலகும்
பதினைந்து வீச்சலகும் நம் தேர்வுதான்.
இதற்குத்தான்
எதுவும் ஆடுகருவி ஆயிற்று
தேர்வு அட்டை மட்டையானது
காகிதச்சுருட்டு பந்தானது
முக்கோடு முக்குச்சியானது.
மட்டை வாங்கித்தாவென்று
தந்தையிடம் மன்றாடியது
இதற்குத்தான்.
பந்தைத் தொலைத்ததற்குப்
பயந்ததும் இதற்கே.
இவ்விளையாட்டைத்தான்
விருப்பப்படி விதி வைத்து
விளையாடினோம்.
'எப்பப் பாரு... கிரிக்கெட்டு...' என்று
உள்ளே பெருமிதத்தோடும்
உதட்டில் கண்டிப்போடும்
தாய் காட்டிய பொய்ச்சினம் உணர்ந்தோம்.
கைக்கு மட்டை வந்ததும்
தோன்றிய பேருணர்ச்சியை
மறக்க முடியுமா ?
நம்மைச் சுற்றி
பத்துப்பேர்
வியூகம் அமைத்து நிற்பது
அத்தனை எளிய தருணமா ?
நாமடித்த பந்து
நான்குக்கும் ஆறுக்கும் போனபோது
பெற்றதுதானே
நமது முதல் தன்னம்பிக்கை ?
ஏன் பிடிக்காது
இவ்விளையாட்டு ?
ஏன் இது
நம்மை ஆட்டிப்படைக்காது ?