இம்ரான் தாஹிருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
Recommended Video

சென்னை: மிகவும் வயதானவர்கள் உள்ள அணி என்ற பெருமையை பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரரான இம்ரான் தாஹிருக்கு, பராசக்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்லப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன தெரியுமா?
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் சிஎஸ்கே உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்கான வீரர்கள் ஏலத்தின்போது, சிஎஸ்கே அணி 36 வயதாகும் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, 31 வயதாகும் சுரேஷ் ரெய்னாவை தக்க வைத்தது. ஏலத்தின்போது, 34 வயதாகும் பிராவோ, 32 வயதாகும் அம்பதி ராயுடு, 36 வயதாகும் ஷேன் வாட்சன், 37 வயதாகும் ஹர்பஜன் சிங், 39 வயதாகும் இம்ரான் தாஹிர் உள்ளிட்டோரை ஏலம் எடுத்தது.
இது என்னடா, ஒரேடியாக வயதானவர்களையே ஏலம் எடுக்கிறார்கள் என்று பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், இந்த வயதானவர்கள்தான் சிஎஸ்கே அணியை தாங்கிப் பிடித்து, புள்ளிப் பட்டியலில் டாப்பில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.

அபார பந்துவீச்சு
இந்த சீசனிலேயே மிகவும் வயதானவரான பாகிஸ்தானில் பிறந்த தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர், இந்த சீசனில் 4 போட்டிகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2014, 2015ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும், 2016, 2017ல் ராயல் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணிக்காகவும் விளையாடினார். இதுவரை 36 போட்டிகளில் 51 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

எக்ஸ்பிரசான சுழற்பந்துவீச்சாளர்
வயதானாலும் தாஹிர் அபாரமாக விளையாடி வருகிறார். அவருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர்தானே, எதற்கு எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

விக்கெட் வீழ்த்தினால் ஓடுவார்
அதற்கான பதிலை, சிஎஸ்கே அணியே கூறியுள்ளது. ஒவ்வொரு முறையும் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, நீண்ட தூரத்துக்கு ஓடிச் சென்று, தனது மகிழச்சியை தாஹிர் வெளிப்படுத்துவார்.

பராசக்தி வசனம்
பராசக்தி படத்தில் வருவதுபோல், ஓடினாள், ஓடினாள் என்ற வசனத்துக்கு ஏற்ப, இவர் ஓடிக் கொண்டே இருப்பதால்தான், அவருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என்ற செல்லப் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று டுவிட்டரில் விளக்கம் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications