இலங்கை டெஸ்டில் இந்தியா வெற்றி பெறாமல் போக காரணமே இதுதான்.. 3 விஷயங்களை பட்டியலிடும் விமர்சகர்கள்
கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததன் மூலம், இந்திய அணி 12 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்திய அணி இலங்கை தொடரையும் சேர்த்து மொத்தம் 9 போட்டிகளில் 2 தோல்விகள் மட்டுமே சந்திக்கலாம் என்ற நிலை உள்ளது. இதனிடையே தான் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெறாததற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர்.
முசலாவது காரணம், இலங்கைக்கு 'பாலோ-ஆன்' வழங்கிய கேப்டன் சுப்மன் கில்லின் முடிவு தவறாக முடிந்தது. முதல் இன்னிங்ஸில் பெரிய முன்னிலை பெற்ற இந்திய அணி, இலங்கைக்குப் பாலோ-ஆன் கொடுத்தது. ஆனால், தொடர்ந்து பந்துவீசியதால் இந்திய பந்துவீச்சாளர்கள் சோர்வடைந்தனர். இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து பெரிய இலக்கை நிர்ணயித்திருந்தால், நான்காவது இன்னிங்ஸில் இலங்கைக்கு பேட்டிங் சற்று கடினமாக இருந்திருக்கும். இந்திய பந்துவீச்சாளர்களுக்கும் தொடர்ந்து 250 ஓவர்கள் வீச வேண்டி வந்திருக்காது. அதனால் பந்துவீச்சு இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

இரண்டாவது காரணம், கொழும்பு ஆடுகளம் கடைசி இரண்டு நாட்களில் மிகவும் மெதுவாக மாறியதுதான். சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தாலும், ஆடுகளத்தில் போதிய பவுன்ஸ் மற்றும் வேகம் இல்லை. இதனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் மானவ் சுதர் ஆகியோரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனது. ஜடேஜா தனது வேகத்தில் மாற்றங்களைக் கொண்டு வராததால் பேட்ஸ்மேன்கள் அவரை எளிதாகக் கணித்தனர். இளம் வீரர் மானவ் சுதருக்குப் போதிய அனுபவம் இல்லாததும் பின்னடைவாக அமைந்தது.
மூன்றாவது காரணம், இந்தத் தொடரின் 4 இன்னிங்ஸ்களிலும் 50 ரன்களுக்கும் மேல் குவித்து, மூன்று சதம் அடித்த இலங்கை வீரர் சோனல் தினுஷா. அவர் முறையே 100, 84, 103 மற்றும் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் என மொத்தம் 420 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். அவரை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்களிடம் எந்த திட்டமும் இல்லை. இந்த டிரா மூலம் இந்தியா 12 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்துள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
