வைபவ் சூர்யவன்ஷி 18 பந்தில் 50 அடித்தும் ஆட்டநாயகன் இல்லை ஆனா 2 விக்கெட் எடுத்தவருக்கு போன விருது
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் விளாசி மிரட்டிய 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படாதது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இடையே விவாதம் எழுந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்ற வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வெறும் 2 விக்கெட் வீழ்த்திய நிலையில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்தப் போட்டியில் 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில், வைபவ் சூர்யவன்ஷி பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற இமாலய சாதனையைப் படைத்த வைபவ் சூர்யவன்ஷிக்குத் தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

மயங்க் யாதவுக்கு இந்த விருது வழங்கப்பட்டதன் பின்னணியில் சில காரணங்கள் உள்ளன. ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்ய வந்தபோது, ஆட்டத்தின் முதல் பந்திலேயே அந்த அணியின் முக்கிய தொடக்க வீரர் பிரையன் பென்னட்டின் விக்கெட்டை மயங்க் யாதவ் வீழ்த்தினார். தொடர்ந்து 5வது ஓவரில் மற்றொரு பேட்ஸ்மேனான டியான் மையர்ஸ் விக்கெட்டையும் அவர் கைப்பற்றினார்.
பவர்பிளே ஓவர்களிலேயே எதிரணியின் முன்னணி பேட்ஸ்மேன்களைச் சாய்த்த அவர், 4 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருடன் பிரின்ஸ் யாதவும் 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
டி20 போட்டிகளில் எதிரணியைக் குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் ஓவருக்கு சராசரியாக 4.50 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, ஆரம்பத்திலேயே போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பியதால் மயங்க் யாதவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஆனாலும், 15 வயதிலேயே வரலாற்றுச் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது ஆதரவை அள்ளி வழங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

