மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் பல விவாதங்கள் எழுந்து இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
இதேபோன்று விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 5 சதம் அடித்து இருக்கும் கருண் நாயர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ்,ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாத குறித்து அவர் வருத்தம் அடையத் தேவையில்லை என கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர்,சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது உண்மையிலேயே கடினமான விஷயம் தான். ஏனென்றால் அவர் இந்தியாவுக்காக விளையாடிய போட்டிகளில் சதம் சதமாக அடித்திருக்கிறார்.
எனவே அவரை அணியில் தேர்வு செய்ய முடியாமல் விட்டதற்கு எந்த ஒரு காரணத்தையும் நம்மால் சொல்ல முடியாது. எனினும் அவர் ரிஷப் பன்ட் இடத்திற்கு போட்டி போட்டு இருக்கிறார். பண்ட் ஒரு நாள் கிரிக்கெட்டில் கேம் சேன்ஜராக இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் பண்ட், இடது கை பேட்ஸ்மேன் ஆகவும் விக்கெட் கீப்பராகவும், இருப்பது கூடுதல் சாதகமான விஷயமாக இருக்கிறது.
சஞ்சு சாம்சனை விட ரிஷப் பண்ட் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது. எனினும் பண்ட்,களத்தில் நின்றால் ஆட்டத்தையே மாற்றக்கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது. இதனால் தான் சஞ்சு சாம்சன் ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்படாமல் விடப்பட்டிருக்கிறார். இதற்காக சஞ்சு சாம்சன் கவலை அடையத் தேவையில்லை.
ஏனென்றால் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அன்பும் இரக்கமும் சஞ்சு சாம்சன் மீது இருக்கிறது.
ஏனென்றால் அவர் அந்த அளவுக்கு சாதித்து இருக்கிறார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு சதம் வங்கதேசத்துக்கு எதிராக ஒரு சதம் என அடித்திருக்கிறார். இதை போன்று ஒரு நாள் கிரிக்கெட்டிலும் சஞ்சு சாம்சனின் சராசரி 56 என்ற அளவில் இருக்கிறது. ஆனால் பண்டின் ஒரு நாள் போட்டியின் சராசரி 33.50 என்ற அளவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.