மொஹாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடரில் ஷர்துல் தாக்கூர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏன் விளையாட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையாக பார்த்தால் பும்ரா, சிராஜ், முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் என்று தான் இருக்கும். இந்திய பவுலர்கள் வரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஷர்துல் தாக்கூரால் எப்படி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற முடிகிறது, முகமது ஷமியை ஏன் ரோகித் சர்மா களமிறக்க மறுக்கிறார் என்பது தான் ரசிகர்களின் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

முகமது ஷமியை விட ஷர்துல் தாக்கூர் சிறந்த பவுலரா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்றே பதில் வரும். ஆனால் முகமது ஷமியை விட ஷர்துல் தாக்கூரால் கூடுதல் ரிஸ்க் எடுக்க முடியும் என்பது தான் அவருக்கான முக்கியமான தகுதியாக உள்ளது. எந்த சூழல்களிலும் பும்ரா, சிராஜ் ஆகியோர் கடந்து புதிய பந்து ஷர்துல் தாக்கூர் கைகளுக்கு வரப் போவதில்லை. ஏனென்றால் 140 கிமீ-க்கும் அதிகமான வேகத்தில் தாக்கூர் வீசுவதில்லை.
13 முத 40 ஓவர்கள் இடையில் தான் ஷர்துல் தாக்கூர் பந்துவீசப் போகிறார். அந்த பகுதியில் பந்துவீசுவதில் தான் ஷர்துல் தாக்கூர் கில்லியாக இருக்கிறார். இந்திய அணியின் முக்கியமான பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூர் உருவாகியதற்கு அவரின் பார்ட்னர்ஷிப் பிரேக்கிங் திறமையே முக்கியமான காரணம். ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் சதத்தை நெருங்கிய போது ஷர்துல் தாக்கூரால் அவரை வீழ்த்த முடிந்தது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், காபா டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்று ஒவ்வொரு முறையும் இந்திய அணிக்கு எதிராக எதிரணிகள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் போதெல்லாம் அவர்களுக்கு எமனாக மாறி இருக்கிறார் ஷர்துல் தாக்கூர். அது ஷர்துல் தாக்கூரின் அதிர்ஷ்டம் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அது ஷர்துல் தாக்கூரின் முழுமையான திறமை. பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற இரட்டை சவால் இருக்கும் சூழலில், ஷர்துல் தாக்கூருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை விக்கெட் எடுப்பது மட்டும் தான்.
மற்ற பந்துவீச்சாளர்களை காட்டிலும் ஷர்துல் தாக்கூரின் எகானமி கொஞ்சம் கூடுதலாக தான் இருக்கும். அதற்கு காரணம், ஷர்துல் தாக்கூர் ஒருநாளும் டிஃபென்சிவ் மனநிலையில் விளையாடியதே இல்லை. எப்போதும் பேட்ஸ்மேனுக்கு ஆசையை தூண்டும் லைன் மற்றும் லெந்தில் பந்துவீசி, ரிஸ்க் எடுத்து ஷர்துல் தாக்கூர் விக்கெட்டை கைப்பற்றுவார். பேட்ஸ்மேன் அதிரடிக்கு தயாராகும் போது சரியான நேரத்தில் வேரியஷன்களை கொண்டு வந்து விக்கெட் வீழ்த்துவதே லார்ட் தாக்கூரின் ஸ்டைல்.
இதனை ஆரம்ப காலத்தில் இருந்தே ஷர்துல் தாக்கூர் செய்து வந்திருக்கிறார். பும்ரா, சிராஜ், அஸ்வின் ஆகியோர் இருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சரி, சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டிலும் செய்திருக்கிறார். அதேபோல் 2021ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஷர்துல் தாக்கூர் பார்ட்னர்ஷிப் பிரேக்கராக உருவெடுத்துள்ளார். மிடில் ஓவர்களில் ஷமியால் விக்கெட் வீழ்த்த முடியாததும், ஷர்துல் தாக்கூரால் விக்கெட் வீழ்த்த முடிவதும் இந்திய பிளேயிங் லெவனில் தாக்கூர் இருப்பதற்கு முக்கியமான காரணம்.
அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதோடு, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ஷர்துல் தாக்கூர் தான். மொத்தமாக 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் பும்ராவின் ஸ்ட்ரைக் ரேட் 31.2ஆக இருக்கும் நிலையில், தாக்கூரின் ஸ்ட்ரைக் ரேட் 28.56ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.