IND vs ZIM: ஒரு ஆர்சிபி வீரரை கூட ஏன் ஜிம்பாப்வே தொடரில் சேர்க்கல.. தமிழக வீரர் சாடல்
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணித் தேர்வில் நிலவும் முரண்பாடுகளை முன்னாள் இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் சடகோபன் ரமேஷ் சாடியுள்ளார். ஐபிஎல் தொடரின் செயல்பாடுகளின் அடிப்படையில் சில வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும், மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டதும், வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டதும் ஐபிஎல் தொடரில் அவர்களின் சிறப்பான ஆட்டத்தின் நேரடி வெளிப்பாடு என்று ரமேஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும், 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை அடுத்தடுத்து வென்று சாம்பியன் பட்டம் பெற்ற ஆர்சிபி அணியில் இருந்து ஒரு வீரர் கூட இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாடியுள்ள ரமேஷ், "டி20 தேர்வுகள் ஐபிஎல் செயல்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே நடக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அது சிலருக்கு மட்டுமே பொருந்துகிறது. இந்தியாவின் தற்போதைய டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியில் இருந்து ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படவில்லை" என்று கூறியுள்ளார்.
"அதேபோல், வைபவ் சூர்யவன்ஷி அவரது ஐபிஎல் ஆட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதே ஐபிஎல் தொடரில், தனது சொந்த அணிக்காக இரண்டாவது பாதியில் பிளேயிங் லெவனில் கூட இடம் கிடைக்காத ரவி பிஸ்னாயை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளனர். ஷெட்ஜ் ஐபிஎல் தொடரில் ஒரு ஓவர் கூட வீசாத போதிலும், இந்திய அணிக்கு ஆல்-ரவுண்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
"104 மாணவர்கள் எழுதும் ஒரு தேர்வின் அடிப்படையில் தேர்வுகளை நடத்தினால், அதில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது தான் அளவுகோலாக இருக்கும். இதை ஐபிஎல் தொடருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 2026 சீசனில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டாவது வீழ்த்தி பர்பிள் கேப் தகுதிப் பட்டியலில் 104 பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் புவனேஷ்வர் குமார் உட்பட ஐந்து இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடங்களுக்குள் இருந்தனர்.
ஆனால், ஜிம்பாப்வே தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பந்துவீச்சாளர்களில் ஹர்ஷ் துபே 47வது இடத்திலும், அசோக் சர்மா 55வது இடத்திலும், 104 பேரில் யாஷ் தாக்கூர் 89வது இடத்திலும் உள்ளனர். மயங்க் யாதவ் இந்தப் பட்டியலிலேயே இல்லை. 2024 இல் இந்தியாவிற்காக மூன்று போட்டிகளில் விளையாடிய பிறகு, மயங்க் யாதவ் வெறும் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்" என்று ரமேஷ் கூறினார்.
ஐபிஎல் பர்பிள் கேப் பட்டியலில் புவனேஷ்வர் குமார், அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ், ரசிக் சலாம் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் பர்பிள் கேப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருந்த போதிலும், அவர்கள் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்து முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications

