28 வயதில் ஓய்வு.. பிரம்மாண்ட துவக்கம் பாதியில் முடிந்த சோகம் - சுக்குநூறான எதிர்பார்ப்புகள்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டாராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட உன்முக்த் சந்த், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
Recommended Video
கிரிக்கெட்... இந்தியாவின் பல இளைஞர்களின் கனவு. பல இளைஞர்கள் சாதிக்கத் துடிக்கும் களம். ஆனால், அந்த களம் ஆசைப்பட்ட அத்தனை பேருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி வாய்க்க வாய்ப்பும் இல்லை.
அதேசமயம், அப்படி வாய்ப்பு கிடைத்தால் அவர்களது வாழ்க்கையே மாறிவிடுகிறது. அவர்களது லைஃப்ஸ்டைல் மாறிவிடுகிறது. கற்பனையே செய்து பார்த்திராத வாழ்க்கை அமைகிறது.

தவறவிட்ட உன்முக்த்
ஆனால், அப்படியொரு வாழ்க்கை கிடைத்தும், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமலோ, அல்லது பயன்படுத்தத் தெரியாமலோ கோட்டை விட்டவர்கள் ஏராளம். அப்படி அதனை கோட்டை விட்டவர்களில் முக்கியமானவர் உன்முக்த் சந்த். ஆம்! 2008ம் ஆண்டு இந்திய அண்டர் 19 அணிக்கு உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த விராட் கோலியைப் போல், 2012ம் ஆண்டு இந்திய அணிக்கு அண்டர் 19 உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தவர் உன்முக்த் சந்த். கோலியைப் போலவே டெல்லியைச் சேர்ந்தவர். இவர் கோப்பையை வென்ற பிறகு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது. ஐபிஎல் அணிகள், இவர் ஏலத்தில் எடுக்க அதிக ஆர்வம் காட்டின.

பிரகாசமான வாழ்க்கை
இன்னும் சொல்லப்போனால், பெப்சி இவரை தங்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தது. தோனி, விராட் கோலி, உன்முக்த் ஆகியோர் இணைந்து விளம்பரங்களில் நடித்தனர். கோலிக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனாக உன்முக்த் இருப்பார் என்றெல்லாம் அப்போது முணுமுணுக்கப்பட்டது. 'இந்திய அணியின் ஃபியூச்சர்' பல எக்ஸ்பெர்ட்ஸ் கணித்தனர். ஆனால், அனைத்தும் மெல்ல மெல்ல அவரை விட்டு விலகத் தொடங்கின. ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் அவரால் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாட முடியவில்லை. இதனால், அவருக்கான வாய்ப்பு மங்கத் தொடங்கியது.

காணாமல் போன சந்த்
அவர் தத்தளித்துக் கொண்டிருக்கும் போதே, ராகுல் டிராவிட் ஒரு அட்டகாசமான இளம் படையை உருவாக்கிவிட்டார். ரிஷப் பண்ட், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில், கமலேஷ் நாகர்கோடி என்று பல இளம் வீரர்களை உருவாக்கி விட, உன்முக்த் சந்தால் அவர்களுடன் போட்டிப் போட முடியவில்லை. இதனால், கிரிக்கெட்டில் இருந்தே ஆள் காணாமல் போனார். இப்போது ரசிகர்கள் பலரும், இவரைப் பற்றிய இந்த செய்தியை படிக்கும் போது கூட, "அட ஆமாம்-ல.. இவரா?" என்று நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.

கைக்கொடுக்கும் அமெரிக்கா
இந்நிலையில், தற்போது 28வது வயதை எட்டியிருக்கும் உன்முக்த் சந்த், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, உலகின் மற்ற இடங்களில் சிறந்த வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அமெரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் லீக்கில் விளையாட உள்ளார். தங்களிடம் பதிவு செய்துள்ள கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிப்பதில்லை. அதில் விளையாட வேண்டும் என்றால் வீர்ரகள் ஓய்வு பெறுவதாக அறிவிக்க வேண்டும். அதனால் தான் அவர் இந்தியாவில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுள்ளார்.

உருக்கமான பதிவு
இதுகுறித்து அவர், "என் நாட்டிற்காக மீண்டும் விளையாட முடியாது என்ற எண்ணம் உண்மையில் என் இதயத்துடிப்பை சிறிது நேரம் நிறுத்துகிறது. எனது கடின உழைப்பு மற்றும் உறுதியுடன் நான் எப்போதும் என் விளையாட்டுக்கு நேர்மையாக இருந்தேன், ஆனால் சில நேரங்களில் விஷயங்கள் கற்பனை செய்தபடி வெளிவராது. பயணத்தின் முடிவில் மட்டுமே வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்க வைக்கிறது" என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். சந்த் 67 முதல்தர ஆட்டங்களில் விளையாடி, 31.57 ஆவரேஜுடன் 3,379 ரன்கள் எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில், அவர் 120 போட்டிகளில் 41.33 ஆவரேஜுடன் 4,505 ரன்கள் எடுத்துள்ளார். டி20 களில், அவர் 22.35 ஆவரேஜுடன் 1,565 ரன்களும் 77 போட்டிகளில் 116.09 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications