"என்னை தகாத வார்த்தையில் திட்டாதே".. இலங்கை பவுலரிடம் எகிறிய ஜெய்ஸ்வால்.. உண்மையை உடைத்த ஜுரல்
மும்பை: கொழும்பில் நடைபெற்ற இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ இடையே களத்தில் கடும் மோதல் வெடித்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜுரல் தற்போது கூறி இருக்கிறார்.
இந்தப் போட்டியின் 17-வது ஓவரில் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை அசிதா பெர்னாண்டோ வீழ்த்தினார். ஆட்டமிழந்த ஜெய்ஸ்வால் அமைதியாக பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். ஆனால் பெர்னாண்டோ தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் அவரைத் திட்டியுள்ளார். இதனால் உச்சக்கட்ட ஆத்திரமடைந்த ஜெய்ஸ்வால், சட்டென திரும்பி வந்து பெர்னாண்டோவின் முகத்திற்கு மிக அருகில் சென்று ஆக்ரோஷமாக எச்சரித்தார்.

இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானதால், இலங்கை வீரர்கள் உடனே தலையிட்டு ஜெய்ஸ்வாலை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா தலையால் முட்டிக் கொண்டதால் இருவருக்கும் ஐசிசி அபராதம் விதித்தது. அப்போது யார் மீது தவறு? என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதற்கு பதில் அளித்துள்ளார் துருவ் ஜுரல்.
இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் பேசிய துருவ் ஜுரல், "ஜெய்ஸ்வால் தானாக சென்று யாரிடமும் சண்டை போட மாட்டார். ஆனால் அசிதா பெர்னாண்டோ எல்லை மீறி தகாத வார்த்தைகளைப் பேசினார். அதனால்தான் ஜெய்ஸ்வால் ஆவேசமாக திரும்பி வந்து, 'என் விக்கெட்டை எடுத்ததற்கு நீ ஆக்ரோஷம் காட்டலாம்; ஆனால் என்னை தகாத வார்த்தையில் திட்ட உனக்கு எந்த உரிமையும் இல்லை' என்று காட்டமாக கூறினார். ஜெய்ஸ்வால் எப்போதுமே பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்துவார். ஆனால் தேவையின்றி சீண்டினால் 100 சதவீதம் திருப்பி அடிப்பார்" என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு சம்மட்டி அடி கொடுத்த நேபாளம்.. ஆசிய விளையாட்டில் ட்விஸ்ட்.. காலிறுதி போக முடியுமா?
அப்போது களத்தில் எல்லை மீறி நடந்துகொண்டதற்காக ஐசிசி விதி எண் 2.12-ன் கீழ் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், தலா 1 தகுதிக்குறைப்பு புள்ளியும் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
