நாட்டிங்காம் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே செய்யாத சாதனையை தற்போது படைத்திருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து ஆட்டத்தின் முதல் ஓவரில் மூன்றாவது பந்திலே இங்கிலாந்து அணியின் சாக் கிராலிக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் மகிழ்ச்சி அடைந்தனர். இங்கிலாந்து அணியை குறைந்த இலக்கில் சுருட்டி விடலாம் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அதன் பிறகு தான் மிகப்பெரிய டிவிஸ்ட் ஏற்பட்டது. இங்கிலாந்து அணியின் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பெண் டக்கட், ஆலி போப் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர்.
குறிப்பாக பென் டக்கட் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் அதிரடி காட்டினார். தொடர்ந்து பவுண்டரிகளை விளாசி வந்த அவர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தார். அவருக்கு ஆலி போப் நல்ல துணையாக நின்றார். இதன் மூலம் இங்கிலாந்து அணி நான்கு புள்ளி இரண்டு ஓவர்கள் எல்லாம் 50 ரன்கள் எட்டி அசத்தியது.
இதன் மூலம் 147 ஆண்டு கால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் 50 ரன்கள் எட்டிய அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி படைத்தது. இதேபோன்று அபாரமாக விளையாடிய பென் டக்கட் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும். இங்கிலாந்து அணி 12 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி வருகிறது.இந்த வேகத்தில் இங்கிலாந்து அணி விளையாடினால் முதல் நாளில் மட்டும் 400 ரன்கள் அடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.