ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஸ்டப்ஸ் 42 பந்துகளில் 76 ரன்களையும், க்ருகர் 32 பந்துகளில் 44 ரன்களையும் விளாசினர்.
இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 65 ரன்களையும், ஷாய் ஹோப் 36 பந்துகளில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 51 ரன்களையும் விளாசினர்.

இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்காக க்வானா மபாகா அறிமுகம் செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் 3.5 ஓவர்கள் வீசிய மபாகா ஒரு விக்கெட் வீழ்த்தியதோடு வெறும் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து அபாரமாக பவுலிங் செய்தார்.
இந்த போட்டியில் அறிமுகமானதன் மூலமாக இளம் வயதில் தென்னாப்பிரிக்கா அணிக்காக அறிமுகமான வீரர் என்ற சாதனையை மபாகா படைத்துள்ளார். 18 வயது மற்றும் 137 நாட்களான மபாகா தென்னாப்பிரிக்கா அணிக்காக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு முன்பாக 1999ஆம் ஆண்டு பென்யோ விக்டர் 18 வயது மற்றும் 314 நாட்களில் அறிமுகமானதே சாதனையாக இருந்தது.
இவர் யு19 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி 6 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். இதனால் மிரண்டுபோன மும்பை அணி நிர்வாகம், அவரை உடனடியாக ஐபிஎல் தொடருக்கு அழைத்து வந்தது. முதல் போட்டியிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இருந்தாலும் மும்பை அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து மேலும் சில போட்டிகளில் வாய்ப்பு கொடுத்தது. இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான 3வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். தென்னாப்பிரிக்கா அணியின் அடுத்த டேல் ஸ்டெய்ன் என்று மபாகாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.