புலவாயோ: தென்னாப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வியான் முல்டர், ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 367 ரன்கள் எடுத்து இருந்தபோது இன்னிங்ஸை டிக்ளேர் செய்த அவரது முடிவு, கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரையன் லாராவின் உலக சாதனையான 400 ரன்களை முறியடிக்க 33 ரன்கள் மட்டுமே இருந்த நிலையில், எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து கிறிஸ் கெயில் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
வியான் முல்டர் எத்தனை பெரிய சாதனையை தவறவிட்டார்? ஏன் டிக்ளேர் செய்தார்? கிறிஸ் கெயில் என்ன சொன்னார்? என்று பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லாவின் 311* ரன்களைத் தாண்டி, ஒரு தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோரான 367 ரன்களை முல்டர் பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்தார்.
வெளிநாட்டு மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இது மார்க் டெய்லரின் 334* ரன்களை முறியடித்தது. முல்டர் தனது முச்சதத்தை 297 பந்துகளில் எட்டினார். இது டெஸ்ட் வரலாற்றில் வீரேந்திர சேவாக்கின் 278 பந்து சாதனையான அதிவேக முச்சதத்திற்குப் பிறகு இரண்டாவது அதிவேக முச்சதமாகும்.
லாராவின் 400 ரன் சாதனையை முறியடிக்கும் பொன்னான வாய்ப்பு முல்டருக்குக் கிடைத்தது. ஆனால், "சாதனைகள் லாராவைப் போன்ற ஜாம்பவான்களுடன் இருக்க வேண்டும்" என்று கூறி அவர் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். பயிற்சியாளர் சுக்ரி கான்ராடும் "சாதனைகளை ஜாம்பவான்களிடம் இருக்கட்டும்" என்று கூறியதாக முல்டர் தெரிவித்தார்.
இரண்டு முறை முச்சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கிறிஸ் கெய்ல், முல்டரின் இந்த முடிவை "பயம் மற்றும் தவறு" என்று கடுமையாக விமர்சித்தார். "எனக்கு 400 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், நான் நிச்சயம் 400 அடிப்பேன்," என்று கெய்ல் கூறினார்.
"இது அடிக்கடி கிடைக்கும் வாய்ப்பல்ல. மீண்டும் ஒரு முச்சதம் எப்போது அடிப்பீர்கள் என்று தெரியாது. அப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்போது, அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஜாம்பவானாக மாற விரும்பினால், சாதனைகள் மூலம் தான் ஜாம்பவான் ஆக முடியும்," என்று கெய்ல் வலியுறுத்தினார்.
ஜிம்பாப்வே போன்ற ஒரு பலவீனமான அணிக்கு எதிராகக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தாதது தவறு என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணி யார் என்பது முக்கியமல்ல, ஒரு சதம் அல்லது முச்சதம் அடித்தால் அது டெஸ்ட் சாதனையாகும் என்றும் கெய்ல் சுட்டிக் காட்டினார். "அவர் பயந்துவிட்டார், ஒரு பெரிய தவறு செய்துவிட்டார்," என்று கெய்ல் மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்தார்.
சர்ச்சை இருந்தாலும், முல்டர் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தி ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தென்னாப்பிரிக்கா 626/5 ரன்களில் டிக்ளேர் செய்தது. பின்னர் ஜிம்பாப்வேயை முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கும், இரண்டாம் இன்னிங்ஸில் 220 ரன்களுக்கும் சுருட்டி, இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் 367 ரன்கள் குவித்ததுடன், முல்டர் பந்துவீச்சில் மூன்று விவிக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.