டோணி என்பதற்காக ஒதுங்க மாட்டோம்.. ஒரு காட்டு காட்டுவோம்.. ரெய்னா
ராஜ்கோட்: டோணி தலைமையில் விளையாடியது சென்னை சூப்பர் கிங்ஸோடு முடிந்து விட்டது. தற்போது எதிரணிக்குப் போய் விட்டார் டோணி. எனவே டோணி தலைமையிலான புனே அணியைச் சந்திக்கும்போது விளையாட்டு உணர்வுடன் மட்டுமே ஆடுவோம் என்று ஐபிஎல் ராஜ்கோட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ள சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு ஐபிஎல் அணிகள் தலா 5 வீரர்களைத் தேர்வு செய்து தங்களது அணி உருவாக்கத்தைத் தொடங்கியுள்ளன. ஐபிஎல் புனே அணியில் டோணி, அஜிங்கியா ரஹானே, அஸ்வின், ஸ்டீவ் ஸ்மித், பாப் டூபிளசிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 3 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள்.
மறுபக்கம் ஐபிஎல் ராஜ்கோட் அணியில் சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, வேயன் பிராவோ, பிரன்டன் மெக்கல்லம், ஜேம்ஸ் பால்க்னர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ராஜ்கோட் கேப்டனாகிறார் ரெய்னா
ராஜ்கோட் அணியின் கேப்டன் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் இந்திய வீரரே கேப்டனாகலாம் என்று தெரிகிறது. அப்படிப் பார்த்தால் ரெய்னாவே கேப்டனாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

முதல் முறையாக வேறு அணி
டோணி, அஸ்வினைப் போலவே தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்தவர் ரெய்னா. தற்போது முதல் முறையாக வேறு அணிக்கு மாறியுள்ளார். அதுவும் தன்னை வளர்த்து ஆளாக்க விட்ட பெருமைக்குரிய டோணியுடன் எதிரும் புதிருமாக மோதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அது வேற.. இது வேற
இதுகுறித்து ரெய்னாவிடம் கேட்டபோது, இது விளையாட்டு, போட்டி என்று வந்து விட்டால் எதிரில் நிற்பவர்கள் எல்லாருமே ஒன்றுதான். டோணியாகவே இருந்தாலும் கூட விளையாட்டு உணர்வுடன்தான் விளையாடுவோம். அவரும் அப்படித்தான் இருப்பார்.

ரொம்பப் பிடித்த ராஜ்கோட்
எனக்கு ராஜ்கோட் மிகவும் பழக்கமான ஊர். இந்த சூழல் எனக்கு மிகவும் பழக்கமானது. ஜூனியர் அளவில் பல போட்டிகளில் இங்கு ஆடியுள்ளேன். எனவே இங்கு ஆடுவது எனக்கு புதிதாக இருக்காது.

லோக்கல் பாய் ஜடேஜா
இந்திய அணியிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் ஆடிய ஜடேஜா, உள்ளூர்காரர். ராஜ்கோட் அணியில் உள்ளூர்க்காரரான அவரும் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருப்பது அணிக்கு உதவும் என்றார் ரெய்னா.

ஏப்ரல் 9 முதல்
அடுத்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை 9வது ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறும்.


Click it and Unblock the Notifications