இலக்கு சுலபம்தான்... ஆனால் ஹைதராபாத் போராடி வென்றது... கடும் சவால் விடுத்தது டெல்லி!
Recommended Video

டெல்லி:ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடுமையான போராட்டத்துக்குப் பிறகு கடைசி ஒரு பந்து மீதமிருக்கையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த டெல்லி அணி, குறைவான ஸ்கோர் எடுத்தபோதும் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக கடுமையாக போராடியது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் நடக்கும் இந்த சீசனின் 36வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின.
ஹைதராபாத் அணி 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் உள்ளது டெல்லி 9 ஆட்டங்களில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்து விளையாடும் 6 ஆட்டங்களில் 2ல் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் களமிறங்கியுள்ளது. அதே நேரத்தில் இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி அடுத்து விளையாடும் 5 ஆட்டங்களிலும் வென்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நிலையில் உள்ளது.

ஹைதராபாத் அல்டிமேட்
பேட்டிங்கில் ஹைதராபாத் அணி கில்லியாக உள்ளது. அதே நேரத்தில் எவ்வளவு குறைவான ஸ்கோரை அடித்தாலும், அதை சமாளிக்கக் கூடியதாக ஹைதராபாத்தின் பவுலிங் உள்ளது. பல போட்டிகளில் மிகக் குறைந்த ரன்களை எடுத்தபோதும், அதில் ஹைதராபாத் வென்றுள்ளது.

டெல்லி தேறுமா
தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததால் டெல்லி கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கமபீர் விலகினார். புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி மூன்று ஆட்டங்களில் 2ல் வென்று அசத்தியுள்ளது. அணியின் வெற்றி தொடருவதற்கு பேட்டிங்கோடு, பவுலிங்கிலும் அசத்த வேண்டும்.

டெல்லி 160 ரன்கள்
இந்த சீசனில் மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக விளங்கும் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பிருத்வி ஷா 65, ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் குவித்தனர். ரிஷப் பந்த் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் சேர்த்தார்.

ஹைதராபாத்துக்கு போராட்டம்
20 ஓவர்களில் 164 ரன்கள் என்ற மிகவும் சுலபமான இலக்குடன் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு டெல்லி கடும் சவால் விடுத்தது. கடைசி ஒரு பந்து மீதமிருக்கையில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 45, ஷிகார் தவான் 33, மணிஷ் பாண்டே 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசியில் கேப்டன் ஷேன் வில்லியம்சன் 32 ரன்களும், யூசுப் பதான் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியை அடுத்து ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. டெல்லி 7வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications