மே 26 முதல்.. இந்தியாவில் FB, ட்விட்டருக்கு தடையா? - "வெரிஃபைட்" ஸ்போர்ட்ஸ் பக்கங்கள் நீக்கமா?
மும்பை: மத்திய அரசின் புதிய சட்ட திட்டங்களை ஏற்காததால், மே 26 முதல் இந்தியாவில் ட்விட்டர், ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில், அதிகாரப்பூர்வ விளையாட்டு பக்கங்களின் நிலை என்ன? என்ற கேள்வியும் எழுகிறது.
ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்பட மூன்று மாதங்களுக்கு முன் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. ஆனால், ஃபேஸ்புக்கோ, ட்விட்டரோ இன்னும் இந்த புதிய விதிமுறைகளை ஏற்கவில்லை.
இந்த நிலையில் அரசு விதித்துள்ள கெடு நாளை (மே 26) முடிகிறது. இதனால் தொடர்ந்து இந்தத் தளங்கள் இயங்க அனுமதி கொடுக்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

விதிமுறைகள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிப்ரவரி 25ம் தேதி, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITy) புதிய விதிகளுக்கு இணங்க அனைத்து சமூக ஊடக தளங்களுக்கும் மூன்று மாத காலக்கெடுவை வழங்கியிருந்தது. ஆனால், அதில் பெரும்பாலான விதிமுறைகளை சமூக வலைதளங்கள் இன்னும் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

நியமிக்கவில்லை
சிறப்பு அதிகாரிகள் நியமனம் , இந்தியாவில் அவர்களின் பெயர் மற்றும் தொடர்பு முகவரி, புகார் தீர்வு, ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை கண்காணித்தல், சிறப்பு அறிக்கை மற்றும் ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை நீக்குதல் ஆகியவை சமூக வலைதள நிறுவனங்கள் அமல்படுத்த உத்தரவிடப்பட்ட விதிகளில் அடங்கும். இதுவரை, எந்த நிறுவனமும் அத்தகைய அதிகாரிகளை நியமிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அரசு கோபம்
'கூ' என்கிற இந்திய சமூக ஊடக நிறுவனத்தைத் தவிர வேறு எந்த முன்னணி சமூக ஊடக நிறுவனமும் அவர்கள் நிறுவனத்தில் குறைகளைக் கேட்டறியும் அதிகாரியையும், தலைமை இணக்க அதிகாரியையும், நோடர் தொடர்பு நபரையும் இன்னும் நியமிக்கவில்லை. மூன்று மாதங்கள் கெடு இருந்தும் நிறுவனங்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மத்திய அரசு கோபத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் நடவடிக்கை
"சமூக ஊடக நிறுவனங்கள் விதிகளுக்குக் கீழ்ப்படியவில்லையெனில், அவர்கள் இடையீட்டாளர்கள் எனும் தங்கள் அந்தஸ்தையும் பாதுகாப்பையும் இழக்கக்கூடும், மேலும் தற்போதுள்ள இந்தியாவின் சட்டங்களின்படி குற்றவியல் நடவடிக்கைகளுக்கு அவர்கள் பொறுப்பாவார்கள்" என்று உயர் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புகார்கள்
கணக்குகளை தன்னிச்சையாக நிறுத்திவைத்தல், சமூக ஊடக தளங்களில் துஷ்பிரயோகம் மற்றும் மத ரீதியிலான அவதூறுகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் என்று பேஸ்புக், ட்விட்டர் யூஸர்கள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தொடர்ந்து புகார்களும் அளித்து வருகின்றனர்.

முடங்கும் அபாயம்
இந்த சூழலில் தான் நாளையுடன், மத்திய அரசு விதித்திருந்த கெடு முடிவடைகிறது. ஆனால், இந்த பிரம்மாண்ட நிறுவனங்களோ கப்சிப் மோடில் இருக்கின்றன. இதனால், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் செயல்பாடுகள் இந்தியாவில் முடக்கப்படுமா என்ற அச்சமும், கேள்வியும் எழுகிறது. அப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுமாயின் விளையாட்டுத் துறை சார்ந்த பல அதிகாரப்பூர்வ கணக்குகள் முடங்கும் அபாயம் ஏற்படுகிறது.

ரசிகர்கள் அச்சம்
குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐக்கு, பேஸ்புக், ட்விட்டரில் அதிகாரப்பூர்வ.. அதாவது வெரிஃபைட் செய்யப்பட்ட அக்கவுண்ட் உள்ளன. அந்த பக்கங்கள், புதிய நடவடிக்கைகளால் நீக்கப்படும் சூழல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய கால்பந்து, இந்திய ஹாக்கி, இந்திய பெண்கள் அணி என்று பல விளையாட்டு அமைப்புகளுக்கும் என தனி அதிகாரபூர்வ பேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் உள்ளன. அவை அனைத்தும் தடைபடுமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications