மீண்டும் மோஷின் நக்வி vs. இந்திய அணி மோதல்.. மகளிர் ஆசிய கோப்பை வென்றால் சர்ச்சை வெடிக்க வாய்ப்பு
துபாய்: 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வரும் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பரிசளிப்பு விழாவில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் ஒரு புதிய சர்ச்சை வெடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இறுதிப்போட்டியின் நிறைவு விழாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்கள் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது, இந்திய எதிர்ப்பு கருத்துகளைக் கூறி வந்த பாகிஸ்தான் அமைச்சரான மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்துவிட்டது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்திய அணி கோப்பை இல்லாமலேயே மேடையில் வெற்றியை கொண்டாடியது. அந்த கோப்பை இன்னும் துபாயில் உள்ள ஏசிசி அலுவலகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அதே போன்ற ஒரு சூழ்நிலை மகளிர் ஆசிய கோப்பையிலும் உருவாகியுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, குரூப் சுற்றில் ஹாங்காங், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி தோல்வியே அடையாமல் கம்பீரமாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணியே இத்தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றால், தலைமை விருந்தினராக வரும் மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான கருத்துக்களை மோஷின் நக்வி தொடர்ந்து கூறி வந்ததால், அவரிடமிருந்து கோப்பையைப் பெறுவதை இந்திய வீராங்கனைகள் தவிர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 2026 மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால் சர்ச்சைகள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications


