
கடைசி செஷன்
முதல் இன்னிங்ஸில் கோட்டை விட்டாலும், இரண்டாவது இன்னிங்ஸில் மாஸ் கம்பேக் கொடுத்தது இந்திய அணி. இதனால் இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று நான்காம் நாள் ஆட்டத்தில் 32 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், இந்தியா ஆல் அவுட் ஆனது. இருப்பினும், 368 எனும் சிறப்பான ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால், இந்த ஸ்கோர் வெற்றிக்கு போதுமானதா? இங்கிலாந்தை கட்டுப்படுத்த இது போதுமா? என்று பார்த்தால், நிச்சயம் போதுமானது தான். ஆனால்.. நேற்று நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி செஷன் இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை.

ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை
32 ஓவர்களையும் முழுமையாக சந்தித்த இங்கிலாந்து ஓப்பனர்கள், விக்கெட் இழக்காமல் 77 ரன்கள் சேர்த்து களத்தில் இருக்கின்றனர். இந்தியா ஃபேஸ் அட்டாக், ஸ்பின் அட்டாக் என்று சரிசம அளவில் கலந்து அடித்தது. அப்படியிருந்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. இதற்கு முக்கிய காரணம், பிட்ச் மெதுவான தன்மைக்கு மாறி இருப்பது தான். கடைசி இரு நாட்களில் பிட்ச் ஸ்லோவாகும் என்றும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்று இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே கணிக்கப்பட்டது. அதற்கேற்றாற் போல், நேற்று ஸ்பின்னர்களால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. மொயீன் அலி கேப்டன் கோலியின் விக்கெட் உட்பட 2 விக்கெட்டுகளை, ஜோ ரூட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அஷ்வின் மிஸ்ஸிங்
இதனால், கோலி நேற்று ரவீந்திர ஜடேஜாவுக்கு 13 ஓவர்களை கொடுத்தார். ஜடேஜாவும் ஓரளவு நன்றாகவே பந்து வீசினார். ரோரி பர்ன்ஸ் அவரது ஓவரில் ரொம்பவே சிரமப்பட்டார். ஜத்துவின் லைன் அண்ட் லெந்த் துல்லியமாக இருந்தது. ஐந்தாவது நாளான இன்றும், பிட்ச் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும். அதாவது லன்ச்சுக்கு பிறகு இன்னும் கூடுதலாக சப்போர்ட் பண்ணும். இந்த நேரத்தில் அணியில் அஷ்வின் இருந்திருந்தால், இந்தியாவுக்கு யானை பலமாக இருந்திருக்கும். ஆனால், கைவசம் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு ஜடேஜா மட்டுமே. அவரையும் குறைத்து எடைபோட முடியாது. இந்தியாவை பொறுத்தவரை, இன்று காலை ஒரு மணி நேரம் என்பது மிக மிக முக்கியமானது. குறிப்பாக, லன்ச்சுக்கு முன்பாக விளையாடப்படும் அந்த 2 மணி நேர ஆட்டம் தான் வெற்றிக்கான தலையெழுத்தை தீர்மானிக்கப் போகிறது.

அதைப் பொறுத்தே முடிவு
பந்துகள் அதிகம் டர்ன் ஆகாத இன்றைய ஐந்தாம் நாள் பிட்சில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் திருப்புமுனை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த இரண்டு மணி நேரத்தில் இந்தியா குறைந்தது 3 விக்கெட்டுகளையாவது கைப்பற்றினால் தான், வெற்றியைப் பற்றி யோசிக்க முடியும். நேற்று ஆண்டர்சனே பந்தை ஸ்விங் செய்ய முடியாமல் சிரமப்பட்டார். இப்படியொரு நிலையில், இந்திய பேஸர்கள் இன்று பந்து வீசியாக வேண்டும். விக்கெட்டுகள் எடுத்தாக வேண்டும். அப்போதுதான், லன்ச்சுக்கு பிறகு ஜடேஜா ஏதாவது சமாளிக்க முடியும். அப்படி லன்ச்சுக்கு முன்பாக விக்கெட்டுகள் எடுக்கவில்லை எனில், இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடும். ஜடேஜாவால் மட்டும் இங்கிலாந்தை கட்டுப்படுத்திவிட முடியாது. அஷ்வினும் அணியில் இல்லை. பிற்பகலுக்கு மேல், வேகப்பந்து வீச்சும் பெரிதாக எடுபடாது. நேற்று இந்திய லோ ஆர்டர் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை எப்படி விளாசினார்கள் என்பதை கண்கூடாக பார்த்தோம். அப்படியொரு நிலைமை இன்று இந்தியாவுக்கும் ஏற்படும். ஸோ, முதல் இரண்டு மணி நேரத்தில் இந்தியா எப்படி பவுலிங் வீசப் போகிறதோ, அதைப் பொறுத்தே முடிவும் அமையும். இன்னும் இங்கிலாந்து வெற்றிப் பெற 291 ரன்கள் தேவை.


Click it and Unblock the Notifications











