இந்தியாவுக்கு புதிய தலைவலி.. 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் 'ஸ்டார்பாய்' ஓப்பனிங்கா?
மான்செஸ்டர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 ஜூலை 4 அன்று மான்செஸ்டரில் நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல் தொடக்க வீரராக களம் இறக்கப்படலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையலாம்.
யார் இந்த ஜேக்கப் பெத்தேல்? 22 வயதான இந்த இடதுகை ஆல்ரவுண்டர், மார்ச் 2026-இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் 48 பந்துகளில் 105 ரன்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) விளாசி இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்தார். 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை இங்கிலாந்து விரட்டியபோது, இவர் இறுதி ஓவரில் ரன்-அவுட் ஆனதால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று இருந்த ஜேக்கப் பெத்தேல் அப்போது பேட்டிங் செய்ய அதிக வாய்ப்புகளை பெறவில்லை. தற்போது அவர் இங்கிலாந்து அணியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து வருகிறார். அவருக்கு அணி நிர்வாகம் மிடில் ஆர்டரில் இருந்து ஓப்பனிங் பொசிஷனுக்குப் பதவி உயர்வு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிந்தாலும், தற்போதைய அதிகாரப்பூர்வ பிளேயிங் லெவலின்படி பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரே தொடக்க வீரர்களாக களம் இறங்குகின்றனர்.
ஏற்கனவே இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் அண்டர்-19 அணிகளுக்காகத் தொடக்க வீரராக விளையாடிய அனுபவம் இவருக்கு உள்ளது. சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சு இரண்டையும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் எளிதாகச் சிதறடிக்கும் திறமை கொண்ட இவரை, மிடில் ஆர்டரில் களம் இறக்கி இந்தியாவைத் திணறடிக்க இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் திட்டமிடலாம்.
ஜேக்கப் பெத்தேல் மிடில் ஆர்டரில் விளையாடினாலும் அது இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன. 2026 உலகக் கோப்பை அரையிறுதி போல பெத்தேல் மீண்டும் ஆடினால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும். எனவே, இந்திய பந்துவீச்சாளர்கள் பெத்தேல் விக்கெட்டை விரைவாக வீழ்த்த தகுந்த வியூகங்களை வகுக்க வேண்டும்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி புரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோஷ் டங்.


Click it and Unblock the Notifications
