மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 50 நாட்களுக்கு குறைவாக தான் இருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு கிரிக்கெட் நாடும் தங்களது அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக இங்கிலாந்து அணியில் பேட்டிங் நடு வரிசையில் பலப்படுத்தும் முயற்சியாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்சை மீண்டும் விளையாட வைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்தது.

இதற்கு பென் ஸ்டோக்ஸ் ஒப்புதல் வழங்கி விட்டார். இதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணியில் திரும்புகிறார். இந்த நிலையில் பலரும் இந்தியாவில் இதுபோல் ஓய்வு பெற்ற தோனியை உலகக் கோப்பை தொடர்க்காக திரும்பி வர சொல்லுங்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை தற்போது பார்க்கலாம். நாம் ஒரு கிரிக்கெட் வீரரின் ரசிகராக இருக்கலாம். அவர் மீது பைத்தியமாக இருக்கலாம். ஆனால் நாம் கேட்பது அது நடக்குமா! அது பயனளிக்குமா? என்பதை மறந்து விடுகிறோம்.
ஐபிஎல் தொடரின் போதே தோனிக்கு வயதாகி அவர் பேட்டிங்கை செய்ய கடைசி கட்டத்தில் தான் வந்தார். வெறும் விக்கெட் கீப்பராக மட்டும் தான் அணியை வழி நடத்தினார். ஆனால் நடப்பதோ 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி. இதில் தோனியின் பங்கு பேட்ஸ்மேனாக மிகவும் முக்கியம். இப்படி இருக்கும் பட்சத்தில் தோனியை உலகக்கோப்பை தொடருக்கு அழையுங்கள் என்று கூறுவது சரிதானா என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
மேலும் தோனி தற்போது தான் காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் அவர் கிரிக்கெட் பேட் எடுத்து பல மாதங்கள் ஆகியிருக்கும். இப்படிப்பட்ட கட்டத்தில் உலகக் கோப்பைக்கு வாருங்கள் என்று ரசிகர்கள் கேட்பதெல்லாம் கண்மூடித்தனமான அன்பு மட்டுமே தவிர அறிவார்ந்த விஷயம் கிடையாது.
ஏற்கனவே காயத்தில் இருந்து தற்போது உலகக்கோப்பை தொடருக்கு தீவிரமாக பயிற்சி செய்து வரும் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் மற்றும் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஷிகர் தவான், அஸ்வின் ஆகியோரை உலகக் கோப்பையில் சேருங்கள் என்று சொல்வதில் ஏதேனும் நியாயம் இருக்கிறது. ஆனால் தான் கிரிக்கெட் விளையாடியது போதும் என்று விலகி சென்ற ஒரு நபரை வந்து விளையாடுங்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்.