மும்பை: சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்திருக்கிறார். 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடர், 2015 உலகக்கோப்பை தொடர், 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் 2018 ஆசியக் கோப்பை தொடர் என்று ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசியவர் ஷிகர் தவான் தான்.
இதன் காரணமாகவே அவரை மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்கள் அழைத்து வந்தனர். அதேபோல் ஐபிஎல் தொடரை முதல் சீசன் முதல் 17வது சீசன் வரை விளையாடி வரும் சில வீரர்கள் ஷிகர் தவானும் ஒருவர். முதல் சீசனில் டெல்லி அணிக்காக ஆடிய ஷிகர் தவான், அடுத்த 2 சீசன்களில் மும்பை அணிக்காக விளையாடினார்.

பின்னர் 2011 மற்றும் 2012 ஆகிய சீசன்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடிய அவர், 2013 முதல் 2018 வரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். அதன்பின் 2019 முதல் 2021 சீசன் வரை டெல்லி அணிக்காக விளையாடிய ஷிகர் தவான், 2022 முதல் 2024 வரை பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார்.
தற்போது ஓய்வை அறிவித்திருந்தாலும், தோனியை போல் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் ஷிகர் தவான் ஓய்வு அறிவிப்பிலேயே, எந்த வகையிலான உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாட மாட்டேன் என்றே ஓய்வை அறிவித்திருக்கிறார். இதனால் இனி ஐபிஎல் தொடரிலும் ஷிகர் தவானை பார்க்க முடியாது என்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக ஷிகர் தவானின் அடுத்த திட்டம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாகவே ஷிகர் தவான் ஓய்வை அறிவித்திருப்பதால், பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் நிச்சயம் ஆலோசனை நடத்தியிருப்பார் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆலோசகர் பணியில் ஷிகர் தவானை பார்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தலைமைப் பயிற்சியாளர் பேலிஸ் உடனான ஒப்பந்தத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி புதுப்பிக்கவில்லை. இதனால் புதிய பயிற்சியாளராக வாசிம் ஜாஃபரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் புதிய பயிற்சியாளர் பொறுப்புக்கு வாசிம் ஜாஃபரை கொண்டு வரும் பட்சத்தில், ஆலோசகராக ஷிகர் தவானை நியமிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.