ஐசிசி தடையால் இனி இலங்கை கிரிக்கெட் விளையாட முடியுமா? தடை பின்னணியில் இருக்கும் உச்சகட்ட அரசியல்
கொழும்பு : இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசு தலையீடு இருப்பதாக கூறி அந்த அணியை ஐசிசி சஸ்பெண்ட் செய்து இருப்பது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
ஜிம்பாப்வே அணிக்கு பிறகு தடை செய்யப்படும் முழு உறுப்பினர் அந்தஸ்தை கொண்ட அணி என்ற பெயரை இலங்கை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ஐசிசி விதித்துள்ள தடை காரணமாக இனி இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுமா என்பது குறித்து அந்நாட்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம். இலங்கை அணி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் ஐசிசியிடம் இருந்து வரும் உதவித்தொகை வரும் ஜனவரி மாதம் வரை கிடைக்காது. இந்தத் தடை எப்படி அமல்படுத்தப்படும் எவ்வளவு நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்பது குறித்து வரும் நவம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ள ஐசிசி யின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் மாதம் வரை எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் இந்த பிரச்சனை அதற்குள் தீர்வுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வேக்கு தடை விதிக்கப்பட்ட போது அந்நாட்டில் நடைபெற்ற அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால் இலங்கை விஷயத்தில் அவ்வாறு ஐசிசி முடிவெடுக்காது என தெரிகிறது.
இலங்கை அணிக்கு சஸ்பெண்ட் விதிக்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று தெரிகிறது. மேலும் ஐசிசி இந்த நடவடிக்கை எடுத்ததற்கு காரணமே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து அந்நாட்டு அரசால் நீக்கப்பட்ட சம்மீ சில்வாதான் என்று தற்போது தெரியவந்துள்ளது.
இது உச்சகட்ட டிவிஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. இலங்கை அரசு கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விட்டதை ஏற்றுக்கொள்ளாத சம்மீ சில்வா ஐசிசி இடம் உடனடியாக இலங்கை கிரிக்கெட்டை சஸ்பெண்ட் செய்ய அறிவுறுத்திருக்கிறார். தற்போது இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் ஐசிசிஐ பொறுத்த வரை இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவராக சம்மி சில்வாவை தான் அங்கீகரித்து இருக்கிறது.
மேலும் அரசு தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக தான் ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இதனால் இந்தப் பிரச்சனை முடிவடையவில்லை என்றால் இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்பெஷல் அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications