
364 ரன்கள்
இப்போட்டியில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்-ஐ கடைசி வரை இந்திய பவுலர்களால் அவுட் செய்ய முடியவில்லை. 321 பந்துகளை சந்தித்த ரூட், 18 பவுண்டரிகளுடன் 180 ரன்கள் குவித்து கடைசி வரை அட்டமிழக்காமல் நின்றார். மற்ற வீரர்கள் ஒத்துழைக்காததால் அவரால் இரட்டை சதம் அடிக்க முடியவில்லை. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முன்னதாக, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். கேப்டன் கோலி 42 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர். இதில், புஜாரா மற்றும் ரஹானே முறையே 9 மற்றும் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

குறையும் கான்ஃபிடன்ஸ்
கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா, இங்கிலாந்து தொடரில் இதுவரை 15 ரன்களைக் கூட தாண்டவில்லை. நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் வெளியேறிய புஜாரா, இரண்டாம் இன்னிங்ஸில் 12 ரன்கள் எடுத்திருந்து களத்தில் இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. தற்போது லண்டன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டு போட்டிகளிலும் ஆண்டர்சன் ஓவரில் தான் அவர் எட்ஜ் ஆனார். சுத்தமாக அவரது பேட்டிங்கில் கான்ஃபிடனஸ் லெவல் இல்லாதது போன்றே இருக்கிறது. குறிப்பாக, ஆண்டர்சன் பந்து வீச வந்தாலே.. 'போச்சு' நாம அவுட்டாகிடுவோம் என்று பதட்டப்பட்டுவிடுவார் போல.

தடுமாறும் புஜாரா
இதுவரை மொத்தம் 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா அடித்துள்ள ரன்கள் 2,656. ஆவரேஜ் 37.71. அதிகபட்ச ஸ்கோர் 193. இது அவரது கடந்த 10 ஆண்டுகால டிராக் ரெக்கார்டு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது டெஸ்ட் கிரிக்கெட் உண்மையில் பல கேள்விகளை எழுப்பியது. அவரால் முன்பு போல் விளையாட முடியவில்லையோ என்ற கருத்து பரவலாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாடுகளில் மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 447 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 26.93. அதிகபட்ச ஸ்கோர் 77. இதில் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தலா 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் விளையாடி 271 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 ரன்களும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் 60 ரன்களும் எடுத்திருக்கிறார்.

ஏமாற்றம்
குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப் போட்டியில் புஜாரா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அவர் மிக பொறுமையாக விளையாடினாலும், அணிக்கு ஓரளவுக்கு தேவையான பங்களிப்பை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் இன்னிங்ஸில் 54 பந்துகளில் 8 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 80 பந்துகளில் 15 ரன்கள் என மொத்தமாகவே 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது. இவர் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கொண்டு 40 ரன்கள் அடித்திருந்தால் கூட, இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பித்து இருக்கலாம். கிரிக்கெட்டில் SENA என்ற ஒரு டெர்ம் உள்ளது. அதாவது, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை குறிக்கும் டெர்ம் இது. ஆசிய அணிகள் இந்த நான்கு நாடுகளில் விளையாட எப்போதுமே சிரமப்படுவார்கள். இதில், ஆஸ்திரேலியாவில் மட்டும் ஓரளவு சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் 47.28 ஆவரேஜ் வைத்திருக்கிறார். ஆனால், மீதமுள்ள இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் அவரது டெஸ்ட் ஆவரேஜ் 27.35 மட்டும் தான்.

சூர்யகுமார் யாதவ்
இந்த நிலையில், மீண்டும் மீண்டும் தனது மோசமான பேட்டிங்கால் புஜாராவின் பெயர் வெகுவாக அடி வாங்கி வருகிறது. அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல் பலமாகியுள்ளது. இந்திய ரசிகர்களே, 'போதும் புஜாரா.. சோதிக்குறது போதும்' என்று சொல்லும் அளவுக்கு அவரது நிலைமை சென்றுவிட்டது. இந்த நிலையில் தான், மூன்றாவது டெஸ்ட் போட்டியில், புஜாராவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தொடரில் விளையாடிவிட்டு, இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்த ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் தங்கள் குவாரண்டைன் காலத்தை முடித்துவிட்டனர். இதனால் அவர்கள் அடுத்த போட்டியில் விளையாட ரெடியாக உள்ளனர்.
Recommended Video

மீண்டும் கிரிக்கெட் சந்தேகம்
இந்த நிலையில், இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ரோஹித், ராகுல் சிறப்பாக விளையாடி ஏற்படுத்திக் கொடுக்கும் தொடக்கத்தை மிடில் ஆர்டர் வீரர்கள் ஏகத்துக்கும் வீண் செய்து வருகின்றனர். இதனால், இந்திய அணியின் ரன்கள் பெரியளவில் அடிவாங்குகிறது. இதனால், 3வது டெஸ்ட் போட்டியில், புஜாரா நீக்கப்பட்டு அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை வாய்ப்பு கிடைத்து சூர்யகுமார் சிறப்பாக விளையாடிவிட்டால், அதன் பிறகு புஜாராவுக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications