ஜூலை மாதத்தில் இந்திய அணி அறிமுகம்.. வைபவ் சூர்யவன்ஷியை வைத்து பிசிசிஐ போட்ட அதிரடி திட்டம்!
மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது முதிர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டால், வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே டி20 தொடரில் அவர் இந்திய அணியில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 128 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய போது, தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். மொத்தம் 17 பந்துகளை சந்தித்த அவர் 52 ரன்களைக் குவித்து ஆட்டத்தை பவர்பிளேயிலேயே ராஜஸ்தான் பக்கம் திருப்பினார். கடந்த சீசனில் 35 பந்துகளில் சதம் விளாசியிருந்த நிலையில், தற்போது மீண்டும் தனது அதிரடியை நிரூபித்துள்ளார்.

இந்திய அணி வரும் ஜூலை 2026-ல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. பொதுவாக ஜிம்பாப்வே தொடர் என்பது இளம் வீரர்களை இந்திய அணியில் அறிமுகப்படுத்தும் முக்கிய களமாகவே பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் தொடங்கி சமீபத்தில் இந்திய அணியில் நுழைந்த ரியான் பராக், துருவ் ஜூரல் வரை பலரும் ஜிம்பாப்வே மண்ணில்தான் தங்களது முதல் சர்வதேச டி20 போட்டியை விளையாடினர். வெளிநாட்டு தொடர் என்பதோடு, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆடும்போது பெரிய அழுத்தம் இருக்காது என்பதும் இதற்கு முக்கிய காரணம். அந்த வரிசையில் வைபவ் சூர்யவன்ஷிக்கும் ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், இந்திய முன்னாள் வீரர்களான முகமது கைஃப் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், அம்பத்தி ராயுடு மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அவசரம் காட்ட வேண்டாம் என வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து பேசிய அஸ்வின், "வைபவ்-க்கு இப்போதே பெரிய இலக்குகளை கொடுக்க வேண்டாம். அவர் இன்னும் ஒரு குழந்தை. அவருக்கு இன்னும் 25 வருட கிரிக்கெட் வாழ்க்கை மீதமுள்ளது. அவரை நிம்மதியாக விளையாட விடுங்கள். சரியான நேரம் வரும்போது அவர் தானாகவே இந்திய அணிக்கு வருவார்" என அறிவுறுத்தியுள்ளார். திறமையான இளம் வீரரை உடனடியாக களமிறக்குவதா அல்லது காத்திருக்கச் செய்வதா என்ற குழப்பத்தில் தேர்வுக்குழு உள்ளது.


Click it and Unblock the Notifications