மூன்றாவது டெஸ்டில் மழை பெய்யுமா? வானிலை அறிக்கை சொல்வது என்ன?
நாட்டிங்ஹம் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹம் நகரில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது. இரண்டாவது போட்டியில் மழை ஆதிக்கம் செலுத்தி போட்டியின் போக்கை மாற்றியது போல, மூன்றாவது போட்டியிலும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, முதல் நாள் முழுவதும் மழையால் தடைபட்டது. இரண்டாவது நாள் மழையால், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதனால், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். 107 ரன்களில் முதல் இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்தது இந்திய அணி. இங்கிலாந்து அணியும் இந்திய வேகப்பந்து வீச்சில் முதல் 5 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. அதே போல, போட்டி முழுவதும் சுழல் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

இதற்கு, மழையால் பிட்ச்சில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், மூன்றாவது போட்டியின் வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
போட்டியின் முதல் நாள் 24-டிகிரி வெப்பம் மற்றும் சிறிதளவு மேகங்கள் இருக்கும். பகல் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. பகல் நேரத்தில் காற்றின் வேகம் 20 முதல் 25 கிலோமீட்டர் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, முதல் நாள் வேகப்பந்துவீசுக்கு சாதகமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியின் இரண்டாம் நாள் காலை நேரத்தில் மழை பொழிய வாய்ப்பு உள்ளது. நாள் முழுவதும் மேகமூட்டமாகவே இருக்கும். வெப்பம் 22-டிகிரி என்ற அளவில் இருக்கும். காற்றின் வேகம் 24 முதல் 35 கிலோமீட்டர் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டாம் நாள் வானிலை தான் போட்டியை நிர்ணயிக்கும் என தெரிகிறது.
போட்டியின் மூன்றாம் மற்றும் நான்காம் நாட்களில் லேசான மேகமூட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் இருக்கும். தூறல் மழை பொழிய குறைந்த வாய்ப்புள்ளது. ஐந்தாம் நாள் மழையோ, தூறலோ பெய்ய வாய்ப்பில்லை. இவ்வாறு, வானிலை முன்னறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, மழை பெய்யாமல் போனால் போட்டியின் மூன்றாவது நாள் முதல் பந்து சுழல வாய்ப்புள்ளது.
Story first published: Saturday, August 18, 2018, 12:48 [IST]
Other articles published on Aug 18, 2018


Click it and Unblock the Notifications