ஷிகர் தவானின் காதல் வலையில் ஆஸ்திரேலியாவின் ஆயிஷா விழுந்தது எப்படி...?
மெல்போர்ன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிரடியாக 137 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட இந்திய வீரர் ஷிகர் தவானின் காதல் கதை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார்' என்பது பொதுவாக கூறப்படுவது. மற்ற துறையில் இருப்பவர்களை விட இது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகமாகவே பொருந்தும் என ரசிகர்கள் கருதுகிறார்கள்.
எனவே, தான் கிரிக்கெட் வீரர்களை மட்டுமின்றி அவர்களது மனைவி மற்றும் காதலி குறித்த தகவல்களை அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். அதற்குத் தகுந்தாற்போல், வீரர்களும் தங்களது காதல் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை.

சச்சின் தனது இறுதி போட்டியில் மனைவி அஞ்சலியுடனான தன் காதலை பற்றி நெகிழ்வுடன் கூறியதை நாம் நிச்சயம் மறந்திருக்க முடியாது. இது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதேபோல், உலக கோப்பையில் அதிரடி தொடக்கத்தை கொடுத்திருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராத் கோஹ்லி, உலக கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்தார். அப்போது கோஹ்லியைப் போலவே அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவிற்கும் பாராட்டுகள் குவிந்தது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிரடியாக 137 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார் ஷிகர் தவான். இதையடுத்து, ரசிகர்களின் கவனம் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி பக்கம் திரும்பியுள்ளது. ஷிகர் தவான் போலவே, ஆயிஷாவுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
ஹர்பஜன் சிங்கின் பேஸ்புக் நண்பர்களில் ஒருவராக இருந்தவர் ஆயிஷா முகர்ஜி. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்த இங்கிலாந்து-வங்காளியான இவர் பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை.
இவருக்கு தவான் தான் முதலில் 'பிரண்ட் ரெக்வஸ்ட்' கொடுத்துள்ளார். அதனை அவர் ஏற்றுக் கொண்டதும், இருவரும் நல்ல நண்பர்களாக பழகத் தொடங்கியுள்ளனர்.
அப்போதுதான் நிறைய விஷயங்களில் இருவரின் ரசனையும் ஒன்றுபோல் இருப்பது தெரியவந்தது. இருவருமே விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. எனவே, வழக்கம் போல நட்பு, காதல் என்ற அடுத்தகட்டத்தை அடைந்தது.
பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் 2009-ல் நிச்சயிக்கப்பட்டு, 2012ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது ஆயிஷாவுக்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
தவானை விட 10 வயது மூத்தவரான ஆயிஷாவுக்கு முதலில், நடந்த திருமணத்தின் மூலமாக 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது புதிதாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. அதற்கு காதல் தம்பதிகள் 'ஜோராவர் தவான்' என்று பெயர் வைத்துள்ளனர்.
தன் காதல் மனைவி ஆயிஷாவின் பெயரை தனது மணிக்கட்டில் பச்சை குத்தி வைத்துள்ளார் தவான். எனவே, தவானின் அதிரடி ஆட்டத்திற்கு அதுதான் ரகசியம் எனப் பாராட்டுகிறார்கள் ரசிகர்கள்.
சூப்பர்!


Click it and Unblock the Notifications