யுவராஜுக்கு ரூ. 1 கோடி - கார் பரிசு: இந்திய அணிக்கும் பரிசு மழை
ஜோஹன்னஸ்பர்க்:
20-20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுகள் குவிந்துள்ளன. ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்த யுவராஜ் சிங்குக்கு ரூ. 1கோடி பரிசும், ஒரு விலை உயர்ந்த காரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசாக அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு சந்தோஷமாக இருக்கும் வகையில், 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்திய அணி.1983ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக கோப்பை சாம்பியன் பட்டம் என்பது கனவாகவே இருந்து வந்தது. கபில் தேவின் சாதனையை யார் முறியடிக்கப் போவது என்றும் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.
ஆனால் நேற்று நடந்த இறுதிப் போட்டியில், சத்தம் போடாமல், அதேசமயம் ஆணித்தரமான முறையில் அசத்தலாக விளையாடி 20-20 உலகக் கோப்பையைப் பெற்று கலக்கி விட்டனர் டோணி தலைமையிலான இளம் இந்திய வீரர்கள்.
சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு பரிசுகள் குவியத் தொடங்கியுள்ளன. இறுதிப் போட்டியை நேரில் காண வந்திருந்த இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவார், டோணி தலைமையிலான இந்திய அணிக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தும், குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்தும் இரட்டை உலக சாதனை படைத்த யுவராஜ்சிங்குக்கு ரூ. 1 கோடி பரிசும், விலை உயர்ந்த போர்ஸ்ச் 911 காரையும் பரிசாக அளிப்பதாக சரத் பவார் அறிவித்தார்.
இதுதவிர இந்திய அணிக்கு 3 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை பவார் அறிவித்துள்ளார். இந்திய அணியின் மேலாளர் உள்ளிட்டோருக்கு ரூ. 15 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும், சாம்பியன் பட்ட பரிசுத் தொகையாக 4 லட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டாலரும் பரிசாக கிடைக்கவுள்ளது.
கர்நாடக முதல்வர் பரிசு:
கர்நாடக வீரர் ராபின் உத்தப்பா மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளரான கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத் ஆகியோருக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
டோணிக்கு ஜார்கண்ட் ரத்னா விருது:
இதேபோல ஜார்க்கண்ட் மாநில அரசு, கேப்டன் டோணிக்கு ஜார்க்கண்ட் ரத்னா விருதை அறிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட 7ம் ஆண்டு கொண்டாட்டம் நவம்பர் 15ம் தேதி ராஞ்சியில் நடக்கிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஜார்கண்ட் ரத்னா விருது வழங்கப்படும் என்று ஜார்கண்ட் மாநிலத்தின் துணை முதல்வர் சுதிர் மஹதோ தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நாளை நாடு திரும்புகிறது. மும்பை வரும் இந்திய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வாங்கடே ஸ்டேடியத்திற்கு வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
சேனலுக்கு ரூ.140 கோடி லாபம்:
20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரடியாக ஒளிபரப்பிய இஎஸ்பிஎன் சேனலில் ஆங்கிலத்திலும், ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தியிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த கிரிக்கெட் போட்டியில் மொத்தம் ஒளிபரப்பிய 27 ஆட்டங்களின் மூலம் இஎஸ்பிஎன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் சேனலுக்கு விளம்பரங்கள் மூலம் மொத்தம் ரூ. 140 கோடி லாபமாக கிடைத்துள்ளதாம்.
இதில் இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு 10 வினாடி விளம்பரம் ஒளிபரப்ப 8 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இதில் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் தமிழிலும் கிரிக்கெட் வர்ணனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இஎஸ்பிஎன், ஸ்டார் கிரிக்கெட் இரண்டு சேனல்களும் ஒரே அங்கம் என்பது நினைவிருக்கலாம்.
சர்மாவுக்கு ரூ.21 லட்சம் பரிசு:
நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் மிஸ்பா-உல்-ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெறச்செய்த ஹரியானாவை சேர்ந்த பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மாவுக்கு, அம்மாநில முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா ரூ.21 லட்சம் பரிசாக அளிக்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications