சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்துள்ளது. வலிமையான டெல்லி அணியின் டார் ஆர்டருக்கு இந்த இலக்கு போதுமா என்று ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து களமிறங்கிட டெல்லி அணிக்கு, முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தீபக் சஹர் வீசிய 2வது பந்திலேயே டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடியாக ஆடிய சால்ட்-ம் தீபக் சஹரின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மணீஷ் பாண்டே செய்த தவறால் அதிரடி வீரர் மிட்செல் மார்ஷ்-ம் 5 ரன்களில் ரன் அவுட்டானார். இதனால் டெல்லி அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
பின்னர் இணைந்த மணீஷ் பாண்டே - ரூஸொவ் கூட்டணி நிதானமாக ஆடியது. இருவரும் இணைந்து 51 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த நிலையில், டெல்லி அணி 12 ஓவர்கள் முடிவில் 76 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் பதிரானா வீசிய யார்க்கரில் மணீஷ் பாண்டே 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து ஜடேஜா பந்தில் ரூஸொவ் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின்னர் டெல்லி அணி வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 77 ரன்கள் தேவைப்பட்டது.
இதையடுத்து அக்சர் படேல் சில பவுண்டரிகளை விளாச, பதிரானா வீசிய ஸ்லோயர் பந்தில் அவரும் 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். 18 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 120 ரன்கள் சேர்த்திருக்க, கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் ரிப்பல் படேல் 9 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, 20வது ஓவரில் பதிரானா லலித் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார்.
இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. சென்னை அணி சார்பாக இளம் வீரர் பதிரானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் பிளே ஆஃப் சுற்றிலும் சென்னை அணி ஒரு கால் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.