மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே நடக்காத சம்பவம்.. இங்கிலாந்து அணியை கதற விட்ட ஆஸ்திரேலிய அணி
மெல்போர்ன்: மகளிர் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியை, ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒயிட் வாஷ் செய்து இமாலய வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் சுமார் நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ஆடவர் அணிகளுக்கிடையே மட்டுமே நடைபெற்று வந்த ஆஷஸ் தொடர் சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டு வருகிறது. மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளும் இடம் பெறும் வகையில் மகளிர் ஆஷஸ் தொடர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மூன்று ஒரு நாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி நடத்தப்படும். இதில் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு நான்கு புள்ளிகள் வழங்கப்படும்.
எந்த அணி அதிக அதிக புள்ளிகளை பெறுகிறதோ, அந்த அணி மகளிர் ஆஷஸ் கோப்பையை வெல்லும். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2025 மகளிர் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 - 0 என இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து வீழ்த்தி இருக்கிறது.
மகளிர் ஆஷஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக அனைத்து போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்த தொடரில் முதலில் நடந்த மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
அப்போதே மொத்தம் உள்ள 16 புள்ளிகள் 12 புள்ளிகளை பெற்று மகளிர் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என ஆவலுடன் கடைசியாக நடந்த டெஸ்ட் போட்டியில் ஆடியது இங்கிலாந்து அணி.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 122 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. முதன்முறையாக மகளிர் கிரிக்கெட்டில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி நடைபெற்றது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 440 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 148 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்துடன் இந்த தொடரில் 16 புள்ளிகளையும் பெற்று 16 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.


Click it and Unblock the Notifications