ஆண்கள் கிரிக்கெட்டும் பெண்கள் கிரிக்கெட்டும் ஒண்ணு இல்ல... வித்தியாசமானது
துபாய் : ஆண்கள் கிரிக்கெட்டும் பெண்கள் கிரிக்கெட்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானது என்று மகளிர் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் நியூசிலாந்து கேப்டன் சோபி டிவைன் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனையும் கிரிக்கெட் வர்ணனையாளருமான மெல் ஜோன்சின் 'ஒரு மணிநேரங்கள் மற்றும் 100 சதவிகித புதுமைகள்' நிகழ்ச்சியில் பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் சோபி டிவைன் இதனை கூறியுள்ளனர்.
மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்த சிறிய பிட்ச்கள் மற்றும் சிறிய பந்துகளை பயன்படுத்துவது சிறந்த பலனை அளிக்கும் என்றும் அவர்கள் தங்களது கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெமிமா, டிவைன் கலந்துரையாடல்
முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனையும் கிரிக்கெட் வர்ணைனையாளருமான மெல் ஜோன்சின் 'ஒரு மணிநேரம் மற்றும் 100 சதவிகித புதுமைகள்' ஆன்லைன் நிகழ்ச்சியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் சோபி டிவைன் ஆகியோர் கலந்துரையாடினர். அப்போது மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய சில ஐடியாக்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

புதுமைகளை புகுத்த வேண்டும்
பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்த பல புதுமையான ஐடியாக்களை கொண்டுவர வேண்டும் என்றும் இருவரும் தெரிவித்தனர். சிறிய பிட்ச்கள் மற்றும் சிறிய பந்து முதலியவற்றை மகளிர் கிரிக்கெட்டில் புகுத்தலாம் என்றும் கூறினர். கடந்த டி20 மகளிர் உலக கோப்பை தொடரில் விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் இத்தகைய ஐடியாக்கள் அதிகமான ரசிகர்களை மகளிர் கிரிக்கெட்டின் பக்கம் ஈர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேம்படுத்த வேண்டும்
ஆண்கள் கிரிக்கெட்டுடன் பெண்கள் கிரிக்கெட்டை ஒப்புநோக்க கூடாது என்றும் இரண்டிற்கும் வித்தியாசங்கள் உள்ளதாகவும் ரோட்ரிக்ஸ் மேலும் கூறினார். மகளிர் கிரிக்கெட்டை அதற்கேற்றாற்போல சில வித்தியாசங்களை புகுத்தி மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகமான ரசிகர்கள் கிடைப்பார்கள்
இதனிடையே,
கிரிக்கெட்டின் பழமையான விதிமுறைகளையே தொடர்ந்து கடைபிடித்து வருவதால் புதிய வீராங்கனைகளை நாம் இழக்கிறோம் என்று டிவைன் தெரிவித்துள்ளார். அதனால் மகளிர் கிரிக்கெட்டில் புதுமைகளை புகுத்துவதன்மூலம் புதிய வீராங்கனைகளை நாம் கிரிக்கெட்டின் பக்கம் இழுக்கலாம் என்றும் அதிகமான புதிய ரசிகர்களும் கிடைப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறந்த அனுபவமாக இருக்கும்
இந்த கலந்துரையாடலின்போது பெர்மிங்காமில் வரும் 2022ல் நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் காமன்வெல்த் போட்டிகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இதுபோன்ற தொடரில் பதக்கங்களை வெல்வது தன்னுடைய கனவு என்று ரோட்ரிக்ஸ் கூறியநிலையில், இத்தகைய போட்டிகளில் பங்கேற்பதே மிகவும் சிறந்த அனுபவமாக இருக்கும் என்று டிவைன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications