செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை!
மெல்போர்ன் : மகளிர் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை செய்துள்ளார் 16 வயது இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா.
Recommended Video
தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிரடியில் கலக்கும் அவர் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீராங்கனை என்ற சாதனையை செய்துள்ளார்.
இவரால் தான் மகளிர் கிரிக்கெட் மாறப் போகிறது என்றும், இவர் ஒருவரே ரசிகர்களை மகளிர் கிரிக்கெட்டை பார்க்க தூண்டுவார் எனவும் இப்போதே அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

16 வயதில் அறிமுகம்
கடந்த செப்டம்பர் 24, 2019 அன்று தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தன் 16 வயதில் அறிமுகம் ஆனார் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா. அப்போது முதல் மகளிர் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக பார்க்கப்படுகிறார்.

அதிரடி ஆட்டம்
அவரது சிறப்பே அதிரடி ஆட்டம் தான். பொதுவாக மகளிர் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் என்பது, ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக இருக்காது. அதிக சிக்ஸர்களை பார்க்க முடியாது. சில வீராங்கனைகள் சில போட்டிகளில் அப்படி அதிரடி ஆட்டம் ஆடுவார்கள்.

சிறுவர்களுடன் பயிற்சி
ஆனால், தான் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக மட்டுமே ஆடி வருகிறார் ஷபாலி. சிறு வயதில் கிரிக்கெட் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்காமல், சிறுவர்களுடன் பயிற்சி செய்ய, தன்னை ஆண் போல மாற்றிக் காட்டிக் கொண்டு பயிற்சி செய்துள்ளார் ஷபாலி.

புதிய சகாப்தம்
அது அவருக்கு சிறப்பான அதிரடி ஆட்டம் ஆட பயிற்சி கொடுத்துள்ளது. அதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்து வருகிறார் ஷபாலி. தற்போது நடந்து வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் சாதனையை செய்துள்ளார்.

அதிக ஸ்ட்ரைக் ரேட்
இது வரை எந்த வீராங்கனையும் ஒரு மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் தொடாத ஸ்ட்ரைக் ரேட்டை தொட்டு மிரட்டல் சாதனை செய்துள்ளார். 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் 172.72 ஸ்ட்ரைக் ரேட்டில் 114 ரன்கள் குவித்துள்ளார். இது உலகக்கோப்பை சாதனை ஆகும்.

முதல் இடம்
அதே போல ஒட்டுமொத்த மகளிர் டி20 போட்டிகளிலும் சாதனை செய்துள்ளார் ஷபாலி வர்மா. டி20 போட்டிகளில் குறைந்தபட்சம் 200 ரன்கள் குவித்த வீராங்கனைகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

ஸ்ட்ரைக் ரேட் என்ன?
17 டி20 போட்டிகளில் 438 ரன்கள் குவித்துள்ள ஷபாலி வர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 147.97 ஆக உள்ளது. இரண்டு அரைசதம் அடித்துள்ளார். 51 ஃபோர் மற்றும் 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார். விரைவில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் ஷபாலி செய்வர் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்த இடங்களில்..
அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்டவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் 722 ரன்கள் குவித்துள்ள ட்ரையான் 138.31 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருக்கிறார். 1875 ரன்கள் குவித்துள்ள அலிசா ஹீலி, 129.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை தொடரில்..
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஷபாலி வர்மா இந்தியா பங்கேற்றுள்ள 3 போட்டிகளிலும் இந்திய அணிக்கு அபார துவக்கம் அளித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 29, வங்கதேசத்துக்கு எதிராக 39, நியூசிலாந்து அணிக்கு எதிராக 46 ரன்கள் குவித்தார்.

மூன்று வெற்றிகள்
மற்ற இந்திய வீராங்கனைகள் பேட்டிங்கில் சொதப்பி வரும் நிலையில், ஷபாலி வர்மாவின் ஆட்டத்தால் மட்டுமே இந்தியா மூன்று போட்டிகளில் ஓரளவு ரன் சேர்த்து, பின் சிறபான பந்துவீச்சால் வெற்றி பெற்றுள்ளது. அணியின் பேட்டிங்கை தனி ஆளாக சுமந்து வருகிறார் இந்த 16 வயது இளம் புயல்.


Click it and Unblock the Notifications