ரூ.121 கோடி பரிசுத் தொகை.. ஆடவர் உலகக்கோப்பையை அடித்து தூக்கிய மகளிர் உலகக்கோப்பை.. ஐசிசி சம்பவம்!
மும்பை: இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க உள்ள மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையாக ரூ.121.29 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆடவர் உலகக்கோப்பை தொடரின் பரிசுத் தொகையாக ரூ.87.92 கோடி அளிக்கப்பட்டது. இதனால் மகளிர் வீராங்கனைகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
செப்டம்பர் 30 முதல் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மொத்தமாக 8 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா களமிறங்கும் நிலையில், சொந்த மண்ணில் இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை குறித்த அறிவிப்பை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். அந்த பரிசுத் தொகை ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
ஏனென்றால் 2023ல் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக ரூ.87.92 கோடி அளிக்கப்பட்டது. ஆனால் 2025 மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையாக ரூ.121.29 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2022ல் நியூசிலாந்து மண்ணில் நடந்த மகளிர் உலகக்கோப்பை தொடருடன் ஒப்பிடும் போது சுமார் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு மட்டும் ரூ.39.39 கோடி கிடைக்கும். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு ரூ.19.69 கோடி பரிசாக கிடைக்கும். அரையிறுதி சுற்றில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கும் ரூ. 9.84 கோடி பரிசாக கிடைக்கும். குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.2.19 கோடி பரிசாக அளிக்கப்படும்.
மகளிர் கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு வகையில் இந்த பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அடுத்தத் தலைமை வீராங்கனைகள் கூடுதல் ஊக்கம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மகளிர் ஐபிஎல் தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் சூழலில், உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது அதன் சந்தையை பெரிதாக்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications