டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி அரையிறுதிபோவதில் என்ன சிக்கல்? தகுதி பெற வாய்ப்புள்ளதா?
லண்டன்: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் ஏ பிரிவில், தென்னாப்பிரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. அதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாக மாறி உள்ளது. தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.
தற்போது குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடி இன்னும் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் கடைசி இடங்களில் உள்ளன.

ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். எனவே, இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்றால், தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்திய அணி தனது அடுத்த போட்டியில் வரும் ஜூன் 25 அன்று வங்கதேசத்தையும், ஜூன் 28 அன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ள உள்ளது.
ஒருவேளை இந்திய அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வி அடைந்தால், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தங்களது போட்டிகளில் வென்று எளிதாக அரையிறுதிக்குச் சென்றுவிடும். இதனால் இந்தியா தொடரிலிருந்து வெளியேற நேரிடும். எனவே, இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெல்வதோடு, தென்னாப்பிரிக்க அணி தனது மீதமுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் புள்ளிகளை இழக்க வேண்டும்.
அப்போதுதான் ரன் ரேட் அடிப்படையில் எந்தப் பிரச்சினையும் இன்றி இந்தியா எளிதாக அரையிறுதிக்குச் செல்ல முடியும். 2024 இல் அரையிறுதிக்கு தகுதி பெறத் தவறிய இந்திய அணி, இம்முறை மீண்டு வர தீவிரமாக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications
