சென்னை: 2025 மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வென்றதற்கு, ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி ஷர்மாவின் ஆல் ரவுண்ட் ஆட்டம் முக்கிய காரணமாகப் பார்க்கப்படும் நிலையில், முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இளம் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணிதான் இந்தியாவின் வெற்றிக்கு "மிகப்பெரிய காரணம்" என்று கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும், ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீ சரணி எதிர்காலத்தில் ஒரு "சூப்பர் ஸ்டார்" ஆக உருவெடுப்பார் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றி குறித்து தனது யூடியூப் பக்கத்தில் விரிவாகப் பேசிய அஸ்வின், இந்திய அணியில் இடம் பெற்று இருந்த சுழற் பந்துவீச்சாளர் ஸ்ரீ சரணியின் பந்துவீச்சுத் திறனை வெகுவாகப் பாராட்டினார்.

இந்த உலகக்கோப்பைத் தொடரின் மறுக்க முடியாத கண்டுபிடிப்பு 21 வயதான ஸ்ரீ சரணிதான். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து உலகக்கோப்பையில் விளையாடும் முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையுடன் களமிறங்கிய அவர், தொடர் முழுவதும் தனது சுழற்பந்து வீச்சால் எதிரணிகளைத் திணறடித்தார். இந்தத் தொடரில் ஒரே ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்திய அவர், மொத்தம் 14 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
குறிப்பாக, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக லீக் சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி, "இந்திய அணியின் முக்கிய அச்சுறுத்தல் ஸ்ரீ சரணிதான்," என்று குறிப்பிட்டது, அவரது பந்துவீச்சு தாக்கத்திற்கு சான்றாக இருந்தது.
ஸ்ரீ சரணியின் பந்துவீச்சு நுணுக்கங்களை, உலகின் தலைசிறந்த மகளிர் சுழற்பந்து வீச்சாளர்களான சோஃபி எக்லெஸ்டோன், ஜெஸ் ஜோனாசென் ஆகியோருடன் ஒப்பிட்டு அஸ்வின் பாராட்டினார். "அவர் பந்தைச் சுழற்றும் வேகம் மிகச் சரியாக இருக்கிறது," என்று குறிப்பிட்ட அஸ்வின், "அது சோஃபி எக்லெஸ்டோன், ஜெஸ் ஜோனாசென் அல்லது சோஃபி மோலினக்ஸிற்கு இணையாக உள்ளது. பந்துவீசும்போது அவரது உடல் எடை மாற்றம், பக்கவாட்டு நிலை (side-on position) ஆகியவை அற்புதமாக உள்ளன. அங்கிருந்து அவரது கை முன்னே வருகிறது. எங்கும் ஆற்றல் வீணாகவில்லை. இந்த உலகக்கோப்பையை அவர் செதுக்கிவிட்டார். இந்தியா இந்த உலகக்கோப்பையை வென்றதற்கு அவர்தான் மிகப்பெரிய காரணம். எதிர்காலத்தில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் பந்துவீச்சாளராக வருவார்" என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், இந்த மகளிர் அணியின் வெற்றி, இந்திய கிரிக்கெட்டில் 1983 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் ஆண்கள் அணி பெற்ற உலகக்கோப்பை வெற்றிகளுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்தார்.
"ஹர்மன்ப்ரீத் கௌர் இந்த இடத்திற்கு வருவதற்குள் பல ஏமாற்றங்களைச் சந்தித்திருப்பார். உதாரணமாக, 2017 உலகக்கோப்பை இறுதிப் போட்டி. அதில் அவர்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றார்கள். ஹர்மன்ப்ரீத் இதுபோன்ற பல தோல்விகளைச் சந்தித்துள்ளார். கையில் இருந்த கோப்பையைத் தவறவிட்ட தருணங்களைக் கடந்து வந்துள்ளார்."
"அவர் போட்ட உழைப்பை வெளியிலிருந்து நம்மால் பார்த்திருக்க முடியாது. கபில் தேவ் விதைத்த விதை, தோனி 2007, 2011-ல் விதைத்த விதை பற்றி நாம் எப்படிப் பேசுகிறோமோ, அதுபோல, ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் அவரது அணி இன்று விதைத்துள்ள இந்த விதை, இன்னும் 10, 20 ஆண்டுகள் கழித்துப் பேசப்படும்" என்று அஸ்வின் குறிப்பிட்டார்.