மகளிர் ஆசிய கோப்பை - 201 ரன்கள் குவித்த இந்திய அணி.. 78 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ-யை வென்றது
டம்புல்லா : ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் யுஏஇ அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வீழ்த்தி இருக்கிறது. இலங்கையின் டம்புல்லாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 9 பந்துகளில் 13 ரன்கள், ஹேமலதா இரண்டு ரன்களிலும் ஆட்டம் இழக்க செபாலி வெர்மா அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இதேபோன்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏழு பவுண்டரி, ஒரு சிக்சர் என 47 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார்.

ஜெமிமா நடுவரிசையில் 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிச்சா கவுஸ் இன்றைய ஆட்டத்தில் யுஏஇ பந்துவீச்சை சுளுக்கெடுத்தார். 29 பந்துகளை எதிர்கொண்ட அவர் 64 ரன்கள் சேர்த்தார். இதில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய யுஏஇ அணியில் தொடக்க வீராங்கனை ஈஷா 38 ரன்கள் தேர்த்தார். தேர்தா சதீஷ் 4 ரன்களிலும், சமைரா ஐந்து ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து கவிதா மட்டும் தனியாக போராடி 32 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். குஷி சர்மா 10 ரன்களில் வெளியேற ஹீனா 8 ரன்களிலும் ரித்திகா ஆறு ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் யுஏஇ அணியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய வீராங்கனைகள் தரப்பில் தீப்தி சர்மா நான்கு ஓவர் வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும், ரேணுகா, பூஜா தனுஜா, ராதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
தற்போது மகளிர் ஆசிய கோப்பை புள்ளி பட்டியலில் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் மூன்று புள்ளி மூன்று எட்டு என்ற நிலையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. ஏ பிரிவில் இந்தியாவை தொடர்ந்து நேபால் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் யுஏஇ நான்காம் இடத்தில் உள்ளது.பி பிரிவில் தாய்லாந்து முதலிடத்திலும், இலங்கை இரண்டாவது இடத்திலும், வங்கதேசம் மூன்றாவது இடத்திலும், மலேசியா நான்காம் இடத்திலும் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications