ஆஸி.யை மிரட்டிய ஜிம்பாப்வே 'பவுலிங்'-கடுமையாக போராடி 262 ரன்கள் குவிப்பு!

இந்தப் போட்டியைப் பார்த்தபோது அமெரிக்கா, ஈராக் போரைப் போலவே தெரிந்தது. காரணம், ஆஸ்திரேலியாவை மிகத் தைரியமாக தங்களது பந்து வீச்சாலும், பீல்டிங்காலும் மிரட்டி விட்டனர் ஜிம்பாப்வே வீரர்கள். துல்லியமான பந்து வீச்சு, பிரமாதமான பீல்டிங் என்று அசத்தி விட்டனர்.
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவால் ரன் குவிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் 250 ரன்களாவது எடுப்பார்களா என்ற கேள்விக்குறிக்கு தள்ளப்பட்டனர் ஆஸ்திரேலியர்கள். நிலைமை அவ்வளவு கவலைக்கிடமாக இருந்தது.
அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பான்டிங் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதிக அளவில் ரன் குவித்து ஜிம்பாப்வேயை நெருக்கடிக்குள்ளாக்கலாம் என்பது அவரது கணிப்பு. ஆனால் எதிர்பாராதவிதமாக ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர்.
இதன் காரணமாக தொடக்க ஆட்டக்காரர்கள் ஷான் வாட்சனும், பிராட் ஹாடினும் ரன் எடுக்கத் தடுமாறினர். வாட்சன் கட்டையைப் போட்டு நிலைமையை சமாளித்தார். ஹாடினும் அதே பாணியைக் கடைப்பிடிக்க நேரிட்டது. விளையாடுவது ஆஸ்திரேலியாவா என்று அனைவரும் வியப்படையும் வகையில் அவர்களது கட்டையாட்டம் களை கட்டிக் காணப்பட்டது.
ஹாடின் முதல் ஆளாக வெளியேறினார். 66 பந்துகளைச் சந்தித்து அவர் 29 ரன்களை எடுத்தார். பின்னர் ரிக்கி பான்டிங் வந்த பிறகு ஆட்டம் சற்றே சூடு பிடித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரிக்கி பான்டிங் 28 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். பவுண்டரி எல்லையிலிருந்து மாஃபு வீசிய பந்து ஸ்ட்ம்பை பதம் பார்த்து பான்டிங்கை அவுட்டாக்கியது.
மறு முனையில் ஷான் வாட்சன் கடுமையாகப் போராடி 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் சேர்ந்த மைக்கேல் கிளார்க்கும், காமரூன் ஒயிட்டும் ஸ்கோரை உயர்த்த பாடுபட்டனர். இதில் கிளார்க் அதிரடியாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்களைக் குவித்தார். காமரூன் ஒயிட் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டேவிட் ஹஸ்ஸி 8 பந்துகளில் 14 ரன்களை விளாசி வெளியேற, ஸ்டீவ் ஸ்மித் படு அதிரடியாக ஆடி 4 பந்துகளில் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மிட்சல் ஜான்சன் 3 பந்துகளைச் சந்தித்து 7 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவ்வாறு கடுமையாகப் போராடி வந்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 262 ரன்களை எடுத்தது.
வாட்சனின் கட்டையாட்டம் வழக்கத்திற்கு விரோதமாக இருந்தாலும் கூட விக்கெட்டைப் பறி கொடுக்காமல் ஆட வேண்டும் என்ற அவரது எண்ணத்தால் ஆஸ்திரேலியா விக்கெட் வீழ்ச்சியை தடுத்து பொறுமையாக ஆடி நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. சற்றே கவனக்குறைவாக ஆடியிருந்தாலும் ஆஸ்திரேலியா மிகக் குறைந்த ஸ்கோரையே எட்ட முடிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே பந்து வீச்சில் அசத்தியவர் பிராஸ்பர் உத்சயாதான். 10 ஓவர்கள் வீசி, 2 மெய்டன் போட்டு, 43 ரன்களைக் கொடுத்து, 1 விக்கெட்டை வீழ்த்தினார் உத்சயா. மாஃபு 2 விக்கெட்களை எடுத்தார். பிரைஸ் மற்றும் கிரெமர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications