சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுள்ளான் நாடாக இருந்தாலும் ஜாம்பவான்களை சுளுக்கெடுத்து வரும் வங்கதேச அணி இன்று இந்தியாவையும் பாடாய்படுத்தி விட்டது. இந்திய அணியை தொடக்கம் முதலே பீதிக்குள்ளாக்கும் வகையில் வங்கதேச வீரர்கள் பந்துவீச இந்திய ரசிகர்கள் பதறித்தான் போயினர்.. இதனால்தான் சென்னை உட்பட நாட்டின் பல நகரங்களில் வீதிகள் வெறிச்சோட வெடவெடத்தபடி வீட்டுக்குள் இந்தியா அனுபவித்த சோதனயை பார்த்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் இன்று இந்தியாவும் வங்கதேசமும் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்கத்தில் சிறிது நேரம் இந்திய அணி தமது வேகத்தை வெளிப்படுத்தினாலும் தவான், கோஹ்லி என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ரன்களையும் குவிக்க முடியாமல் போக என்ன செய்யப் போகிறது இந்திய அணி என தவிக்க வைத்துவிட்டது..
ஏற்கெனவே மார்ச் மாதத்தில் வங்கதேசத்துடன் மோதும் போட்டிகளில் இந்தியா தோற்று விடும் என ஆரூடங்கள் பறந்து கொண்டிருக்க அதற்கேற்ப இந்திய அணியின் ஆட்டமும் அமைந்தது. ஒருவழியாக பெரும் போராட்டத்துடன் 302 ரன்களை எட்டிவிட்டதுதான் இந்தியா..

இப்படியான பரபரப்பான பதற்றமான போட்டியை காண்பதற்காகவே வீடுகளில் முடங்கிவிட்டனர் போல இந்திய ரசிகர்கள்.. நாட்டின் பெருநகரங்களில் பல சாலைகள் வெறிச்சோடி கிடந்தன..
குறிப்பாக சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் வாகன நெரிசலாக காட்சி தரும்.. ஆனால் இன்று பகலில் ஏதோ பாலைவனத்துக்கு செல்லும் சாலை போல வெறிச்சென காட்சி அளித்தது.
டிவி ஷோரூம்களில் வழக்கம் போல நகத்தைக் கடித்தபடி, டோணி வந்துட்டார்யா.. வெளுப்பார் பாரேன்... அய்யய்யோ... சூப்பர் பவுண்டரிப்பா.. செம சிக்சரப்பா.....அட போங்கப்பா என்ற அங்கலாய்ப்பு குரல்களுடன் மதிய நேர பசியை மறந்து குவிந்து கிடந்தனர் ரசிகசிகாமணிகள்.