உலக கோப்பை தொடர்களில் 'தனக்கு தானே ஆப்பு' வைத்துக் கொண்ட வீரர்கள்!
சிட்னி: உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று யூ.ஏ.இயுடன் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே வீரர் ரேஜிஸ் சக்கப்வா ஹிட்விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். இதுவரை நடந்த உலக கோப்பைகளில் 7 முறை வீரர்கள் இதுபோன்ற மோசமான ஒரு அவுட்டை ஆகியிருந்த நிலையில் எட்டாவது வீரராக அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் சக்கப்வா. இந்த எட்டு அவுட்டுகளில் 5 முறை ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த வீரர்களே அவுட் ஆகியிருப்பது விந்தையாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு எதிராக இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர் ரேஜிஸ் சக்கப்வா 35 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடிவந்தார். ஆனால் யூ.ஏ.இ கேப்டன் தாகிர் பந்து வீச்சின்போது, லெக் திசையில் பந்தை அடித்தபோது, கால்கள் ஸ்டம்பில் பட்டு பெயில்கள் சிதறின. இதனால் ஹிட்விக்கெட் முறையில் நடையை கட்டினார் ரேஜிஸ். உலக கோப்பையில் இதுபோல அவுட் ஆவது இது எட்டாவது முறையாகும். எதிர்பாராத இந்த அவுட்டுகள் பேட்ஸ்மேன்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், எரிச்சலையும் தரவல்லவை.

முதல் வீரர்
முதல்முதலில் உலக கோப்பையில் ஹிட்விக்கெட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்த மோசமான நிகழ்வை பதிவு செய்தவர் மேற்கிந்திய தீவுகளின் ராய் பிரெட்ரிக்ஸ். 1975ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் எடுத்திருந்தபோது, இதுபோல அவர் அவுட் ஆனார்.

கனடா வீரர்
1979ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது கனடா வீரர் டென்னிஸ், 21 ரன்களில் ஹிட்விக்கெட்டாகி நடையை கட்டினார்.

கென்யாவின் ஒடும்பே
1996ல் கென்ய நாட்டு வீரர் மவுரிஸ் ஒடும்பே, மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் எடுத்திருந்தபோது ஹிட்விக்கெட் ஆனார்.

கேரி கிறிஸ்டன்
1996 உலக கோப்பையின்போது மற்றொருவரும் அதேபோல அவுட் ஆனார். அவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன். மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இவ்வாறு அவுட் ஆனார்.

மீண்டும் ஒரு கனடா வீரர்
2003 உலக கோப்பையின்போது இலங்கைக்கு எதிரான போட்டியில் கனடாவின் ஜோ ரூஸ் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹிட்விக்கெட்டானார்.

2வது முறையாக ஒடும்பே
2003 உலக கோப்பையில் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் கென்ய வீரர் மவுரிஸ் ஒடும்பே ஹிட்விக்கெட் ஆகி டக் அவுட் ஆனார். 1996லும் இதேபோல மே..இ.தீவுகளுக்கு எதிராகத்தான் ஒடும்பே அவுட் ஆகியிருந்தார். உலக கோப்பையில் இருமுறை ஹிட்விக்கெட் ஆனவர் என்ற மோசமான பதிவும் இவரின் பெயர் பின்னால்தான் இன்னமும் நீடிக்கிறது.

ஜிம்பாப்வே வீரர்
2007ல் ஜிம்பாப்வேயின் வுசி சிபாண்டா, அயர்லாந்துக்கு எதிராக 67 ரன்கள் எடுத்து ஹிட்விக்கெட் ஆனார்.

இப்போதும் ஜிம்பாப்வே
இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் ரேகிஸ் சக்கப்வா. இன்றைய யூ.ஏ.இ அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் எடுத்து ஹிட்விக்கெட் ஆனார்.


Click it and Unblock the Notifications