7 பழைய வீரர்கள்.. 8 புதிய வீரர்கள்.. 2 நாளுக்கு முன்பே உலகக்கோப்பை இந்திய அணியை அறிவித்த சேவாக்!!
டெல்லி : 2௦19 ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்பான விவாதங்களும் உச்சத்தை எட்டி உள்ளன.
அதற்கு காரணம், ஏப்ரல் 15 அன்று உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், முன்னாள் இந்திய வீரர் சேவாக், உலகக்கோப்பைக்கான தன் அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்.

தெளிவான அணித் தேர்வு
சேவாக் தன் அணியை தெளிவாக 2015 உலகக்கோப்பையுடன் ஒப்பிட்டு தேர்வு செய்துள்ளார். 2011இல் உலகக்கோப்பை வென்ற இந்திய அணி, 2015இல் அரையிறுதி வரை மட்டுமே சென்றது. அந்த அணியில் இடம் பெற்ற 7 முக்கிய வீரர்களை அப்படியே 2019 உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்துள்ளார் சேவாக்.

அனுபவம் + இளமை
15 வீரர்கள் கொண்ட இந்திய உத்தேச அணியில், மீதமுள்ள 8 வீரர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய அணியில் அறிமுகமானவர்கள். ஆக, அனுபவம் + இளமை என சமபலம் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் சேவாக்.

உலகக்கோப்பை அணி
2015இல் ஆடிய அந்த ஏழு வீரர்கள் - விராட் கோலி, ரோஹித் சர்மா, தவான், தோனி, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முஹம்மது ஷமி. 2015 உலகக்கோப்பையில் இடம் பெறாத எட்டு புதிய வீரர்கள் - கேதார் ஜாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், விஜய் ஷங்கர், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரிஷப் பண்ட்.

ஒரே ஒரு மாற்றம்
இந்த அணியை பலரும் ஏற்கனவே ஊகித்து இருப்பார்கள் என்றாலும், சேவாக்கின் இந்த அணியில் பலரும் ஒரே ஒரு மாற்றத்தை குறிப்பிட்டு கூறியுள்ளனர். அந்த மாற்றம், ரிஷப் பண்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்க வேண்டும் என்பதே.

வாய்ப்பை இழந்தவர்கள்
சேவாக் அளித்துள்ள பட்டியலில் கடந்த 2015 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று தற்போது வாய்ப்பை இழந்த 8 வீரர்கள் யார் என்பதும் இடம் பெற்றுள்ளது. இவர்களுக்கு மாற்றாகவே 8 புதிய வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

எட்டு வீரர்கள் யார்?
அந்த எட்டு வீரர்கள் - சுரேஷ் ரெய்னா, ரஹானே, ஸ்டுவர்ட் பின்னி, அஸ்வின், அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா, அம்பதி ராயுடு. இவர்களில் அம்பதி ராயுடுவுக்கு சேவாக் இடம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications