ஜியோ வைத்த பெரிய ஆப்பு.. விற்பனைக்கு வந்த டிஸ்னி ஹாட்ஸ்டார்.. சன் டிவியுடன் பேச்சுவார்த்தை!
சென்னை: 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் சந்தையை பிடிப்பது தான் பெரு நிறுவனங்களின் மிகமுக்கிய குறிக்கோளாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஓடிடி சந்தையில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் ஓடிடி பயன்பாடு காரணமாக, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகி வந்தது.
இதனை காண்பதற்காக ரசிகர்கள் பலரும் அதிக பணம் செலவழிக்க வேண்டிய தேவை இருந்தது. இதனால் வேறு வழியின்றி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் கட்டி வந்தனர். இது கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருடன் முடிவுக்கு வந்தது. ஏனென்றால் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை அதிக தொகை கொடுத்து ஜியோ நிறுவனம் கைப்பற்றியது.

இதனால் ஜியோ நிறுவனம் எவ்வளவு சந்தா கேட்பார்கள் என்று ரசிகர்கள் சந்தேகம் கொண்ட நிலையில், ஐபிஎல் ஒளிபரப்பு இலவசம் என்று அறிவித்தது. இதனால் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சிக்கான ஐபிஎல் உரிமையை கைப்பற்றிய ஸ்டார் நிறுவனத்தால், ஓடிடி-யை கைப்பற்ற முடியவில்லை.
இதனால் நடப்பாண்டில் கோடிக்கணக்கான சந்தாதாரர்களை ஹாட்ஸ்டார் நிறுவனம் இழந்தது. அதுமட்டுமல்லாமல் ஹெச்பிஓ நிறுவனம் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி, ஜியோவுடன் ஒப்பந்தம் செய்தது. இதனால் பிரத்யேக வெப் தொடர்களையும் இழக்க வேண்டிய சூழலுக்கு ஹாட்ஸ்டார் தள்ளப்பட்டது.
இந்த நிலையில் ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் தொலைக்காட்சியை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனத்தை கவுதம் அதானி மற்றும் சன் டிவி குழுமத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், சில நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் மட்டுமே இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் விரைவில் ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ஜியோ, சன் டிவி அல்லது கவுதம் அதானி உள்ளிட்ட நிறுவனங்களில் யார் வாங்குவார்கள் என்பது தெரிய வரும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனத்திடன் ஐசிசி போட்டிகள், ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை, இந்தியாவில் ஆஸ்திரேலிய போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை, விம்பிள்டன் ஒளிபரப்பு உரிமை மற்றும் ப்ரோ கபடி லீக் உள்ளிட்டவை இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications