சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்களுக்கான ஓய்வறை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடக்கவுள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதவுள்ளன. அதில் இந்தியா மட்டும் வெவ்வேறு மைதானங்களில் லீக் போட்டிகளில் விளையாடவுள்ளன. அதில் அக்.8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி முதல் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 5 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் அக்.8ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அதேபோல் அக்.14ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன. அதேபோல் அக்.18ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
அதேபோல் அக்.23ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இறுதியாக அக்.27ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடவுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சிறிதளவு சாதகமாக இருக்கும் சூழலில், ஆஃப்கானிஸ்தான் அணி இரு போட்டிகளில் விளையாடவுள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடருக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் வீரர்களுக்கான ஓய்வறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஓய்வறையின் நுழைவு வாயிலில் சேப்பாக்கம் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்பின் வீரர்களுக்கான உணவும் சாப்பிடும் அறை, கழிவறை, அதன்பின் ஓய்வறை என்று பல்வேறு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து போட்டியை பார்க்கும் வகையிலும் நேரடியாக களமிறங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் 38 ஆயிரம் ரசிகர்கள் உலகக்கோப்பை போட்டிகளை பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.