இந்திய 'வேகம்' முகமது ஷமிக்கு முட்டியில் காயம்.. அரபு அமீரகத்துடனான நாளைய போட்டியில் ரெஸ்ட்!
பெர்த்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது மூன்றாவது லீக் ஆட்டத்தில் பெர்த் மைதானத்தில் நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், இடது முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த போட்டியில் ஆடப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இப்போட்டியில் ஆடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறு காயம்
இந்திய அணியின் மீடியா மேலாளர் ஆர்என்.பாபா இதுகுறித்து கூறுகையில், "முகமது ஷமிக்கு ஏற்பட்டிருப்பது சிறு காயம்தான். அல்ட்ராசவுண்ட் உதவியுடன் கூடிய ஊசி மருந்து அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

பாகிஸ்தானை நிலைகுலைத்தவர்
கடந்த இரு போட்டிகளில் முகமது ஷமியின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இரு போட்டிகளிலும் அபாரம்
இருபோட்டிகளிலும் சேர்த்து ஷமி மொத்தம் 17 ஓவர்களை வீசியுள்ளார். அதில் 2 மெய்டன் ஓவர்களாகும். 65 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

குறைந்த போட்டியில் நிறைந்த தரம்
42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி, 76 விக்கெட்டுகளை சாய்த்து, குறைந்த போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் 5 வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

ரெஸ்ட் நல்லதுதான்..
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சுக்கு எதிரான போட்டியில் ஷமி ஆடாதது இந்தியாவுக்கு பின்னடைவு என்றபோதிலும், இந்த போட்டியில் ஓய்வெடுப்பதன் மூலம் பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக ஷமி முழு உடல் தகுதியுடன் களமிறங்க முடியும் என்பது இந்திய அணி நிர்வாக திட்டமாக உள்ளது.


Click it and Unblock the Notifications