உலகக் கோப்பைதான் நாங்கள் சச்சினுக்குத் தரப் போகும் மிகப் பெரிய பரிசு-டோணி
டெல்லி: சச்சின் டெண்டுல்கருக்கு இதுவரை தந்த பரிசுகளிலேயே மிகப் பெரியதாக நாங்கள் வென்று தரப் போகும் உலகக் கோப்பை அமையும் என்று இந்திய அணியின் கேப்டன் டோணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் சச்சினை மிகவும் நேசிக்கிறோம். இதுதான் அவருக்கு அனேகமாக கடைசி உலகக் கோப்பைப் போட்டியாக இருக்கும். ஆனால் அவர் மேலும் சில உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆட நாங்கள் விரும்புகிறோம்.
எது எப்படி இருப்பினும், இந்த உலகக் கோப்பையை அவருக்காக வென்று கொடுத்து, நாங்கள் தந்த பரிசுகளிலேயே மிகச் சிறந்த பரிசாக இதை அவருக்கு வழங்குவோம்.
இந்த உலகக் கோப்பை சச்சினுக்கானதாக நாங்கள் கருதுகிறோம். எனவே அதை எப்படியும் வெல்வோம் என்றார் டோணி.
கடந்த 1992ம் ஆண்டு முதல் ஐந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார் சச்சின். கிட்டத்தட்ட 20 வருடமாக கிரிக்கெட் ஆடி வருகிறார். உலக அளவில் டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும் அதிக ரன்களைக் குவித்த வீரர் இவர்தான். அவரால் நிகழ்த்தப்பட்ட, முறியடிக்கப்பட்ட சாதனைகள் ஏராளம். உச்சமாக, ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை (200) எடுத்த ஒரே வீரரும் இவர்தான்.
இருப்பினும் சச்சினால் இதுவரை ஒரு உலகக் கோப்பையைக் கூட இந்தியாவுக்கு வென்று தர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications