ஐபிஎல் அனுபவம் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளித்தது-புக்கானன்

ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் ஜான் புக்கானன். ஆஸ்திரேலிய அணிக்கு வரிசையாக உலக கோப்பை பெற்று தந்த பயிற்சியாளர் என்பதால் கொல்கத்தா அணியையும் சூப்பராக மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லாம் தலைகீழாகி போனது.
கொல்கத்தா அணி ஐபிஎல் சீசன் 2ல் கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்து. வெற்றி என்பதை அறியாத அணியாக மாறிப் போனது. ஆனால், நட்சத்திர வீரர் கங்குலியுடன் மோதல், பல கேப்டன் முறை என சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல் இருந்தது.
இதையடுத்து வெறுத்து போன அணியின் உரிமையாளர் ஷாருக் கான் கடந்த மாதம் பயிற்சியாளர் ஜான் புக்கானனை நீக்கும் அதிரடி முடிவை எடுத்தார்.
இந்நிலையில் தனது இந்திய அனுபவம் ஏமாற்றமானதாக அமைந்ததாக அவர் மெல்போர்னில் பேட்டி கொடுத்துள்ளார். அதில்,
ஷாருக் கானும், நானும் இணைந்து ஐந்து ஆண்டுகளில் அணியை பெரிய அளவில் மாற்ற திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஷாருக் இரண்டு ஆண்டுகளில் தனது முடிவை மாற்றி கொண்டார். அவர் நான் அணிக்கு தேவையில்லை என கூறிய போது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தேன்.
கங்குலி திறமை காட்டவில்லை...
முதல் தொடரில் கேப்டனாக இருந்த கங்குலி இரண்டாவது தொடரில் தனக்கு திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இரண்டாவது தொடரில் நாங்கள் 9 போட்டிகளில் கடைசி ஓவரில் தோற்றோம். 5 போட்டியில் கடைசி பந்தில் வெற்றியை பறிகொடுத்தோம்.
ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்ன் எதுவும் தன்னை சுற்றி தான் நடக்க வேண்டும் என நினைப்பவர். அதற்கான வழிகளை, யுக்திகளை அடையாளம் கண்டு கொள்வதில் அவர் திறமைசாலி.
ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக 8 ஆண்டுகள் இருந்துள்ளேன். உலக கோப்பை வென்று தந்துள்ளேன். ஆனால், இவை எதையும் நான் திட்டமிடவில்லை. தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் இளம் வீரர்களுக்கு பயிற்சியளிக்க போகிறேன் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications