மும்பை : 2023 ஐசிசி ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரை பெரிய அளவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
ஆனால், முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் ரசிகர்கள் பெரிய அளவில் உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண ஆர்வம் கட்டவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டியை 1,34,000 ரசிகர்கள் அமரக் கூடிய அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தியது பிசிசிஐ. அந்தப் போட்டிக்கு 40,000 பேருக்கு இலவச டிக்கெட்கள் கொடுத்தே போட்டி நடந்தது. அப்போதும் கூட போட்டியைக் காண 25,000 பேர் வரை தான் நேரில் வந்ததாக கூறப்பட்டது.
அதாவது அந்த 25,000 பேரில் எத்தனை பேர் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினார்கள் என்பதை கணக்கிட்டால் இரண்டு அல்லது மூன்று ஆயிரம் பேர் தான் இருக்கும். அடுத்து பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதிய இரண்டாவது போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டிக்கும் குறைவான அளவிலேயே ரசிகர்கள் நேரில் வந்தனர்.
இந்த இரண்டு போட்டிகளிலும் ஆடிய நான்கு அணிகளின் நாடுகளின் ஊடகங்களும் இந்த போட்டிகளை கண்டு, மைதானம் காலியாக இருப்பதை விமர்சனம் செய்து எழுதத் தொடங்கின. ரசிகர்கள் ஏன் புறக்கணித்தார்கள்? என்பதற்கு முக்கிய காரணமே தொடரை நடத்தும் பிசிசிஐ செய்த சொதப்பல்கள் தான் என பல உலக ஊடகங்களும் கூறி வருகின்றன.
பிசிசிஐ செய்த முதல் சொதப்பல், இது போன்ற பெரிய தொடர்களுக்கு குறைந்தது மூன்று மாதங்கள் முன்பே போட்டி அட்டவணையை வெளியிட்டு, உடனடியாக ஒரு பகுதி டிக்கெட் விற்பனையை தொடங்கி இருக்க வேண்டும்.
அப்போது தான் வெளியூர்களில், வெளிநாட்டில் இருந்து போட்டியை நேரில் காண வருபவர்களால் விமானம் மற்றும் பிற பயண ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய முடியும். விமான பயணங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்தால் கட்டணம் குறைவாக இருக்கும். பயண நாளுக்கு அருகே ஒரு தேதியில் முன்பதிவு செய்தால் கட்டணம் மிக அதிகமாக இருக்கும்.
ஆனால், பிசிசிஐ உலகக்கோப்பை தொடர் துவங்க 45 நாட்களுக்கு முன்பு தான் டிக்கெட் விற்பனையை ஆரம்பித்தது. மேலும், முதலில் அறிவித்த போட்டி அட்டவணையை மீண்டும் ஒரு முறை மாற்றி அமைத்தது. இது எல்லாம் சேர்த்து பலரை வெளியூர்களில், வெளிநாடுகளில் இருந்து போட்டிக்கு வரவிடாமல் செய்து விட்டது.
வெளியூர்களில் உள்ளவர்கள் டிக்கெட் வாங்காமல் போனால் அடுத்து உள்ளுரில் இருப்பவர்கள் தான் டிக்கெட் வாங்க வேண்டும். ஆனால், அதையும் ஆன்லைனில் விற்பனை செய்தது பிசிசிஐ. அதை பிளாக் டிக்கெட் விற்பவர்கள் வாங்கி அதிக விலைக்கு ஆன்லைனிலேயே விற்கத் துவங்கினார்கள்.
அடுத்து டிக்கெட் கட்டணமும் நடுத்தர வர்க்க மக்கள் வாங்கும் விலையில் இல்லை. இந்தியா ஆடாத போட்டிகளுக்கு கூட பல ஆயிரங்களில் டிக்கெட் கட்டணம் இருந்தது. இது எல்லாம் சேர்ந்தே உலகக்கோப்பை போட்டிகளை ஈயாட வைத்துள்ளது.
தற்போது பிசிசிஐ இலவச டிக்கெட்களை அளிக்க வேண்டும் என சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கூறத் துவங்கி இருக்கின்றனர். இலவச டிக்கெட் கொடுத்தாலும் மக்கள் வெயில் போன உடன் தான் மாலை நேரத்தில் தான் போட்டியைக் காண வருவார்கள். எனினும், இந்திய அணி ஆடும் போட்டிகளுக்கு மட்டும் நல்ல கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.