ஆட்டோ டிரைவர் மகனின் "ஆஹா" ஆட்டம்... 1000 ரன்களைக் குவித்து வரலாறு படைத்தார்!
மும்பை: கிரிக்கெட் உலகில் இப்படி ஒரு சாதனை இதுவரை நடந்ததே இல்லை.. மிகப் பெரிய மிக பிரமாண்டமான சாதனையை சத்தமின்றி நிகழ்த்தி விட்டார் மும்பையைச் சேர்ந்த 15 வயது இளம் வீரர் பிரணவ் தனவாடே. அசகாயமாக ஆடிய அவர் 1000 ரன்களைக் குவித்து தொடர்ந்து ஆடியும் வருகிறார்.
நேற்று 199 பந்துகளில் 652 ரன்களை இந்த குட்டிப் பையன் உலக சாதனை படைத்த நிலையில் இன்று பிற்பகலில் 1000 ரன்களைக் கடந்து வரலாறும் படைத்தார். மும்பையைச் சேர்ந்த தனவாடே, மும்பையில் நேற்று தொடங்கிய பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் பேய்த்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பள்ளிகள் அளவிலான கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த வீரராக புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார் தனவாடே. இதற்கு முன்பு 1899ம் ஆண்டு ஏஇஜே காலின்ஸ் என்பவர் எடுத்திருந்த 628 நாட் அவுட் என்பதே தனி ஒரு வீரர் ஒரு இன்னிங்ஸில் அதிகம் குவித்த ரன்னாக இருந்தது. தற்போது அதை தனவாடே புதிய வரலாற்றுடன் முறியடித்துள்ளார்.

கல்யாண் பள்ளி மாணவர்
கல்யாண் பகுதியில் உள்ள திருமதி கேசி காந்தி ஹை ஸ்கூல் பள்ளியில் படித்து வரும் மாணவர் தனவாடே. அந்த அணியின் சார்பில் ஆடிய பிரணவ், நேற்று காலை தொடங்கி இன்று பிற்பகல் வரை சற்றும் சோர்வடையாமல் பின்னிப் பெடலெடுத்து வருகிறார்.
பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட்
பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இது. ஆர்யா குருகுல் பள்ளிக்கு எதிரான போட்டியில்தான் இந்த உலக சாதனையைப் படைத்தார் தனவாடே. நேற்று 600 ரன்களைக் கடந்த அவர் இன்று 1000 ரன்களைக் கடந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
அபார ரன் குவிப்பு
தனவாடே போட்ட போடால் நேற்றைய ஆட்ட நேர இறுதியில் அவரது அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 956 ரன்களைக் குவித்திருந்தது. இன்று அணியின் ஸ்கோர் அசுர வேகத்தில் உயர்ந்து அதுவும் சாதனையாகியுள்ளது.

1000 ரன்களைக் கடந்து
இந்த நிலையில் இன்று பிற்பகல் வாக்கில் தனவாடே 1000 ரன்களைக் கடந்து புதிய வரலாறு படைத்தார். அவர் 1000 ரன்களைத் தொட்டபோது போட்டியைப் பார்க்க வந்திருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று உற்சாகத்துடன் கைதட்டி தனவாடைவே வாழ்த்தினர்.

வரலாறு காணாத சாதனை
கிரிக்கெட் வரலாற்றில் உலகின் எந்த மூலையிலும் இப்படி யாரும் விளையாடியதில்லை. இந்த அளவுக்கு தனி நபர் ஸ்கோரை யாரும் எடுத்ததில்லை என்பதால் பிரணவின் ஸ்கோர் புதிய வரலாறாக மாறியுள்ளது.
ஆட்டோ டிரைவரின் மகன்
10வது வகுப்பு படித்து வருகிறார் தனவாடே. இதில் விசேஷம் என்னவென்றால் இவரது தந்தை பிராஷந்த் ஒரு ஆட்டோ டிரைவர். நேற்று தனது மகனை ஆட்டோவில் கொண்டு வந்து விட்டுப் போய் விட்டாராம்.

நண்பர் கூறியதைக் கேட்டு ஓடி வந்தார்
பிரணவ் 300 ரன்களைக் கடந்து அதிரடி காட்டியதைத் தொடர்ந்து பிரஷாந்த்தின் நண்பர் தகவலைக் கூறியுள்ளார். உடனே ஆட்டோவுடன் போட்டி நடந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளார் பிரஷாந்த். மகனின் அதிரடியை நேரில் கண்டு களித்த அவர் உலக சாதனையையும் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

பெருமை மகிழ்ச்சி
எனது மகன் சாதனை படைத்திருப்பது பெருமை தருகிறது. மகிழ்ச்சி தருகிறது. 11 வருடமாக அவன் கடுமையாக உழைத்து வந்தான். அதற்குக் கிடைத்த பரிசுதான் இது என்றார் அவர்.

இன்னொரு சச்சினாக வருவாரா?
"சிவாஜி பார்க்"கிலிருந்துதான் சச்சின் டெண்டுல்கர் வந்தார்.. அதேபோ கல்யாணிலிருந்து இந்த குட்டி சச்சின் இந்தியாவின் பெயரை எதிர்காலத்தில் பிரகாசிக்க வைப்பாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications