ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. இந்தியாவிடம் தோற்ற கோபத்தில் டிவிகளை ரோட்டில் போட்டு உடைத்த பாக். ரசிகர்கள்
இஸ்லாமாபாத்: உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோற்றதையடுத்து அந்த நாட்டு ரசிகர்கள் டிவிக்களை தெருக்களில் போட்டு உடைத்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையின்போதும், இதேபோன்று பாகிஸ்தான் ரசிகர்கள் தோல்வி விரக்தியால் டிவிக்களை உடைத்திருந்தனர்.
உலக கோப்பை டி20 தொடரில், இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான சூப்பர்-10 சுற்று போட்டி கடந்த சனிக்கிழமை, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
மழையால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில், டாசில் தோற்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.

கைகொடுத்த கோஹ்லி
இரண்டாவது பேட் செய்த இந்திய அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், கோஹ்லி, யுவராஜ்சிங் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

அபார வெற்றி
15.5 ஓவர்களிலேயே, இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை குவித்து, பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி அசத்தியது. இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை ரசித்து ஆனந்த கூத்தாடினர்.

லைவ் ஷோ
பாகிஸ்தானிலும் ரசிகர்களிடையே இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. லாகூர் தெருக்களில் பெரிய ஸ்கிரீன்கள், எல்சிடி டிவிக்களில் போட்டியை ரசிகர்கள் லைவாக பார்த்து ரசித்தனர். இஸ்லாமாபாத்தின் மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதேபோல ரசிகர்கள் கிரிக்கெட்டை பார்த்தனர்.

தொடர் தோல்வியில் பாகிஸ்தான்
உலக கோப்பை டி20 போட்டிகளில் இந்தியாவை இதுவரை வெற்றி பெறாத பாகிஸ்தான் அணி அன்றைய போட்டியோடு சேர்த்து 11வது முறையாக தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்திடம் தோற்று நெருக்கடியில் இருந்த இந்தியாவை பாகிஸ்தான் பந்தாடும் என்று நினைத்த ரசிகர்களுக்கு, இந்தியாவின் பதிலடி மூளையை கிறுகிறுக்கச் செய்துவிட்டது.
உடைச்சிபுட்டாங்க
கோபமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள், எல்சிடி டிவிக்களை தெருவில் போட்டு உடைத்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்தியாவை, ஒருபோதும், பாகிஸ்தானால் வெல்லவே முடியாது. ஜெயிப்பார்கள் என்று நினைத்து போட்டியை பார்த்தது எங்கள் முட்டாள்தனம்தான் எனவும் கோஷமிட்டனர்.

இவிங்க இப்படித்தான் பாஸ்
பாகிஸ்தான் வீரர்களை ஓய்வு பெறுமாறு போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையின்போதும், இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது. அப்போதும் பாகிஸ்தான் ரசிகர்கள் டிவியை போட்டு உடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications