
நாளை அரையிறுதி
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து நடுவேயான அரையிறுதி போட்டி டெல்லி பெரோஷா கோட்லாவில் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கோஹ்லி சூப்பர்
அப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான விராட் கோஹ்லியின் ஆட்டம் குறித்தும் வில்லியம்சன் சிலாகித்தார். பேட்டி அப்படியே பேச்சுவாக்கில் நியூசிலாந்து அணியின் 'இந்திய சுற்றுப்பயணம்' குறித்தும் வந்தது.

பல நகரங்கள்
ஏனெனில், நியூசிலாந்து அணி மும்பையில் மார்ச் 10 மற்றும் 12ம் தேதிகளில் வார்ம்-அப் போட்டிகளில் ஆடியது. இதன்பிறகு, நாக்பூரில் மார்ச் 15ம் தேதி சூப்பர்-10 போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது.

வடக்கே
இதன்பிறகு வடக்கே இமய மலை சாரலிலுள்ள தர்மசாலாவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 18ம் தேதி ஆடியது. இதையடுத்து மலையில் இருந்து இறங்கி வந்து பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் மார்ச் 22ல் பாகிஸ்தானை சந்தித்தது.

கிழக்கே
இந்தியாவின் வட மேற்கிலுள்ள சண்டீகரில் இருந்து ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவில் கிழக்கே உள்ள கொல்கத்தா பயணித்த நியூசிலாந்து, மார்ச் 26ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதையடுத்து நேற்றுதான் டெல்லி வந்து சேர்ந்துள்ளது.

இங்கிலாந்து ஜாலி
அதேநேரம், எதிர்த்து ஆட உள்ள இங்கிலாந்தோ ஜாலியாக உள்ளது. வார்ம்-அப் மற்றும் முதல் இரு குரூப் ஆட்டங்களையும் மும்பையிலேயே முடித்துக்கொண்டது இங்கிலாந்து. இதன்பிறகு டெல்லி சென்ற இஹ்கிலாந்து அடுத்த இரு லீக் ஆட்டங்களையும் அங்கேயே ஆடியது. இப்போது அரையிறுதியும் டெல்லியில்தான்.

டூர் போனோம்
இதுகுறித்து கருத்து கூறிய வில்லியம்சன், இங்கிலாந்து அணி இரண்டே இடங்களில்தான் ஆடியுள்ளது. இது யதேர்ச்சையாக நடந்ததாக இருக்கலாம். நியூசிலாந்து அணி வீரர்கள் இந்தியாவின் பல பகுதிகளை சுற்றி பார்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளோம்.

சூட்கேசுடன் அலைகிறோம்
அதேநேரம், சூட்கேசை தூக்கியபடி ஒவ்வொரு நகரத்திற்கும் பயணிக்க வேண்டியதையும், புது புது ஹோட்டல்களில் தங்க வேண்டியுள்ளதும், நியூசிலாந்து வீரர்களுக்கு சற்று சோர்வை அளித்துள்ளது. இவ்வாறு வில்லியம்சன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











