மும்பை : 2023 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் தற்போது இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த சீசனுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.
முன்னதாக அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் 2023இல் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலும் இடம் பெற்று இருந்தார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் ரன் குவித்து வரும் அவர் வெறும் 13 இன்னிங்ஸ்களில் 861 ரன்கள் குவித்து உலக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

2023 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா (855 ரன்கள், 20 இன்னிங்ஸ்), இங்கிலாந்தின் ஜாக் கிரவுளி (706 ரன்கள், 15 இன்னிங்ஸ்) உள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்திய அளவில் ஜெய்ஸ்வாலுக்கு அடுத்ததாக இடம் பெற்றுள்ள வீரர் ரோஹித் சர்மா. அவர் 13 இன்னிங்ஸ்களில் 540 ரன்கள் குவித்து உலக அளவில் 12வது இடம் பெற்று இருக்கிறார். சுப்மன் கில் 13 இன்னிங்ஸ்களில் 371 ரன்கள் குவித்து 18வது இடத்தில் இருக்கிறார்.
விராட் கோலி இந்தப் பட்டியலில் 19வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என்பது தான். அவர் தான் ஆடிய 6 இன்னிங்ஸ்களில் 369 ரன்கள் குவித்து இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருந்தால் நிச்சயம் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்று இருப்பார்.
பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா 9 இன்னிங்ஸ்களில் 29 விக்கெட் வீழ்த்தி இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 5வது இடத்திலும் இருக்கிறார். அடுத்து உலக அளவில் 6வது இடத்தில் அஸ்வின் 11 இன்னிங்ஸ்களில் 27 விக்கெட்களுடன் இடம் பெற்று இருக்கிறார். முகமது சிராஜ் 8வது இடத்தில் 11 இன்னிங்ஸ்களில் 20 விக்கெட்களுடன் இடம் பெற்று இருக்கிறார்.